சமூகக் குற்றங்களுக்கு திரைப்படங்கள் காரணமா ? இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா காட்டம்
தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி', ஹிந்தியில் 'கபீர் சிங், அனிமல்' ஆகிய படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா. தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறார். இவரது படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம் பெறும் என்ற ஒரு சர்ச்சை இருக்கிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 21 வயது இளைஞர் ஒருவர் 'மோட்டார் ரம்பம்' வைத்து தாக்கியுள்ளார். அதில் அந்த மாணவி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளாகி உள்ளது.
பிரபல யு டியுபர் துருவ் ரதி, “இந்தக் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியாக இருந்த, 'அனிமல், துரந்தர்' போன்ற திரைப்படங்களுக்கு நன்றி,” என விமர்சித்திருந்தார். அதையடுத்து சமூகக் குற்றங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணம் என்ற சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் பலரும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய 'அனிமல்' படம் பற்றியும் குறிப்பிட்டு எழுத ஆரம்பித்தனர்.
அவற்றிற்கு விளக்கமளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் சந்தீப் ரெட்டி வங்கா, “ஒருவர் கொடூரமான குற்றத்தில் ஈடுபடும்போது, முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதுடன், அந்தக் குற்றத்திற்குப் பின்னால் உள்ள ஆழமான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக, திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவதற்கு வசதியான பலிகடாவாகப் பயன்படுத்தக் கூடாது.
உங்களது உண்மையான அக்கறை பாதிக்கப்பட்டவர்கள் மீதோ, அவர்களது குடும்பத்தினர் மீதோ இல்லை என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, ஒரு கொடூரமான துயரச் சம்பவத்தைத் தங்களது தனிப்பட்ட வன்மத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்கான மலிவான வாய்ப்பாகப் பயன்படுத்துகிறீர்கள்.
குறிப்பாக, தோல்வியடைந்த, விரக்தியடைந்த, வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் நடிகர்கள், சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள், மற்றவர்களின் படைப்புகளைக் குறை கூறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திடீரெனத் தங்களைச் சமூக சீர்திருத்தவாதிகளாக முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு துயரச் சம்பவத்திற்குத் தேவைப்படுவது அனுதாபமே தவிர, சந்தர்ப்பவாதம் அல்ல. இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்காவின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகள் பதிவாகியுள்ளன.