ரத்த பரிசோதனை செய்யுங்க... வாரன்ட் இன்றி போலீசார் ரெய்டு : பாலாஜி முருகதாஸ் காட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். கடந்தாண்டு ‛பயர்' என்ற படத்தில் நடித்தார். மாடலிங் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சென்னை வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இரவு இவரது வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அருகில் வசிக்கும் பெண்ணொருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முறையான வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டார். மேலும் இதுபற்றி எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛நான் தெரிந்து கொள்ள விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். யார் என் மீது புகார் அளித்தார். நான் எவ்வளவோ முறை கேட்டும் போலீசார் பதிலளிக்கவில்லை. ரத்த பரிசோதனை செய்து கொள்ளக்கூட தயாராக இருக்கிறேன் என கூறினேன். 15 போலீசார் வந்தனர். இறுதியில் அவர்கள் கண்டு பிடித்தது 3 பூனையும், ஒரு நாயும் மட்டுமே'' என குறிப்பிட்டு முதல்வர் விஜய்க்கு டேக் செய்துள்ளார்.
மற்றொரு பதிவில் ‛‛எந்தவொரு தேடுதல் வாரன்ட்டும் இல்லை, ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு போன்கால் வைத்து இவ்வளவு நடந்துள்ளது. வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் சொல்கிறார். இதற்கு யார் பொறுப்பேற்பது. போலீஸ் மன்னிப்பு கேட்கும் வரை இதை நான் விடப்போவதில்லை. கோர்ட் மூலம் சந்திக்கிறேன். 30 ஆண்டு கடின உழைப்பு மற்றும் போராட்டம். இதேபோன்று வாரிசு நடிகர்கள் வீட்டில் செய்ய முடியுமா'' என கேள்வி எழுப்பி உள்ளார்.