உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தலைப்பை மாற்ற எதிர்ப்பு : தணிக்கைக் குழுவுக்கு கேரளா பிலிம் சேம்பர் கடிதம்

தலைப்பை மாற்ற எதிர்ப்பு : தணிக்கைக் குழுவுக்கு கேரளா பிலிம் சேம்பர் கடிதம்

சமீபத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவில் உள்ள 18 உறுப்பினர்கள் கொண்ட குழு மாற்றியமைக்கப்பட்டு புதிய குழு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, பல புதிய விதிகளும் கடுமையான வழிமுறைகளும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த விதியில் ஒரு படத்திற்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் என்பது தணிக்கைக் குழுவின் இறுதி ஒப்புதல் கிடைக்கும் வரை உறுதியானதாகக் கருதப்படாது என்றும், தணிக்கைக் குழுவின் பரிசீலனைக் கமிட்டிக்குத் திரைப்படங்களின் தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கவோ அல்லது மாற்றவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா பிலிம் சேம்பர், இது தயாரிப்பாளர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மற்றும் அவர்களது பொருளாதார வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியது எனக் கருதுகின்றது. இதுகுறித்துத் தணிக்கைக் குழுவிற்கு கேரளா பிலிம் சேம்பர் பொதுச்செயலாளர் சோனி தாமஸ் ஜான் எழுதிய அதிகாரப்பூர்வமான கடிதத்தில், ஒரு திரைப்படத்தின் தலைப்பு என்பது அதன் தயாரிப்புக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விளம்பரங்கள் மற்றும் புரமோஷன் பணிகளுக்காகப் பல லட்சங்கள் செலவிடப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு வரும் இறுதிக்கட்டத்தில் தலைப்பை மாற்றச் சொன்னால் அது ஒட்டுமொத்த திட்டமிடலையும் மாற்றிவிடும். இறுதி நேரத்தில் பெயர்களை மாற்றச் சொல்வது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும்.

1990 முதல் பல வருடங்களாக பிலிம் சேம்பர்கள் மூலம்தான் தலைப்புகள் பதிவு செய்யப்பட்டு அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தணிக்கைக்கு வரும் தலைப்புகள் ஆபாசமாக இல்லாமலும், யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லாமலும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்தே அனுமதிக்கப்படுகின்றன என்று அதில் கூறியுள்ளார்.. இந்த ஒரு விதியைத் தவிர தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள மற்ற நான்கு புதிய வழிகாட்டல்களுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் பிலிம் சேம்பர் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !