உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மானியம் கிடைத்தால் தான் மகள் திருமணம் நடக்கும் : பிரபல தயாரிப்பாளரின் மனைவி கண்ணீர்

மானியம் கிடைத்தால் தான் மகள் திருமணம் நடக்கும் : பிரபல தயாரிப்பாளரின் மனைவி கண்ணீர்

'பிதாமகன்', 'என்னம்மா கண்ணு', 'கஜேந்திரா', 'லூட்டி', 'விவரமான ஆளு' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ துரை. ‛பிதாமகன்' படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர் அதன்பிறகு பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டு பல தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். உடல்நலன் பாதிக்கப்பட்டு 2023ம் ஆண்டு காலமானார்.

சிறந்த கருத்தைச் சொல்லும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் போனால், தயாரிப்பாளர் நஷ்டமடையக் கூடாது என்கிற நோக்கத்தில் திரைப்பட மானியத் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 2015 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

ஆண்டுக்கு 28 படங்கள் வீதம் 8 ஆண்டுக்கும் சேர்த்து 224 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. வி.ஏ. துரை தயாரித்து 2016 ல் வெளியான 'காகிதக் கப்பல்' படம் மானியம் பெறத் தகுதியானதாக அறிவிக்கப்பட்டு, ' தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி லக்ஷ்மிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் உங்கள் படம் பட்டியலில் இல்லை என்று மானியம் தராமல் நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வி.ஏ துரையின் மனைவி லட்சுமி கண்ணீர் மல்க கூறி இருப்பதாவது : எனது கணவர் இறந்து விட்டதால் அவரது ஒரே மகளுக்கு தான் மானிய தொகை வர வேண்டும். அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம். ஆனாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை எங்கள் படத்தை நிராகரித்து விட்டனர்.

நாங்கள் இப்போது மிகுந்த வறுமையில் இருக்கிறோம். ஒரு சிறிய வாடகை வீட்டில் வாழ்கிறோம். தள்ளாத வயதிலும் நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வருகிறேன். எனது மகள் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்க இந்த மானியத் தொகையை தான் நம்பி இருந்தேன். அது ஏனோ மறுக்கப்பட்டு விட்டது. தமிழக முதல்வர் அவர்கள் பெரிய மனது வைத்து எனக்கு மானியம் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !