தமிழில் ஏன் தலைப்பு இல்லை : தங்கர்பச்சான் ஆதங்கம்
மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள படம் ‛அப்பா குட்டி'. சென்னையில் நடந்த இப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான் வழக்கம்போல் அதிரடியாக பேசியதாவது...
“முதலில் விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் பெயர் வைத்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர்கள் வைக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால் வாரத்திற்கு வெளியாகும் பத்து படங்களில் இரண்டு படங்களுக்குக் கூட தமிழில் பெயர் இருப்பதில்லை. இதுகுறித்து ஊடகங்களோ, கலைஞர்களோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மக்களுடைய பணம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது வருத்தமளிக்கிறது. முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதற்காக வரிச்சலுகை வழங்கப்பட்டது. இப்போது இந்த விஷயத்தில் அரசுகள் கவனம் செலுத்துகின்றனவா என்று தெரியவில்லை. இது அவமானமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர். அவர் ஒரு கலைஞராகவும், மனிதராகவும் தரமானவர். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு இரண்டு முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் பார்க்க முடியவில்லை. இன்றைய மனித வாழ்க்கை உறவுகளைக் கடந்து பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் நேசிப்பவர்களுடன் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் கைபேசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இப்படிப்பட்ட திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.
குறிப்பாக, குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உலக அளவில் குறைந்துவிட்டன. குழந்தைகளின் உலகமே அவர்களிடமிருந்து திருடப்பட்டுவிட்டது. மண்ணையும், நீரையும், உணவையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டோம். குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியைப் பெற்றோரின் கைபேசிகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக் கூடத்திலும் வீட்டிலும் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம். அவர்களுக்கு அன்பு எங்கே கிடைக்கும்?
இவற்றையெல்லாம் பேசுவதற்கான கலைதான் திரைப்படம். ஆனால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் நவீன கேமராக்கள், ஒளி, ஒலி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பெரும்பாலும் வன்முறையைக் காட்சிப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தல், மது அருந்துதல் போன்றவற்றை விதவிதமாகக் காட்டவும் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றன என்று தொடர்ந்து எழுதுகிறோம். அந்தப் பணத்தால் சமூகத்திற்கு என்ன பயன்? மீண்டும் மீண்டும் அதே போன்ற படங்களைத்தான் உருவாக்குகிறார்கள். அதற்குப் பதிலாக, மக்களிடம் உறவுகளையும் அன்பையும் பேசக்கூடிய இப்படிப்பட்ட திரைப்படங்கள் கவனிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும்''.
இவ்வாறு அவர் பேசினார்.