உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 90 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது இதுதான் கடைசி என நினைத்தேன் : ராஷ்மிகா மந்தனா

90 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது இதுதான் கடைசி என நினைத்தேன் : ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் மைசா.. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த, கடினமான சூழல்களால் போராளியாக மாறும் அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார் ராஷ்மிகா. ரவீந்திர புல்லே என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவில் உள்ளன.

ஏற்கனவே கேரளாவில் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் அதேபோல நீருக்கு அடியில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் நடைபெற்ற படப்பிடிப்பில் ராஷ்மிகா கலந்து கொண்டதும் செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது ஒரு காட்சியில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்தது குறித்து தனது திகில் அனுபவத்தை விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு எப்போதுமே உயரம் மற்றும் பாம்புகள் மீது மிகுந்த பயம் உண்டு. அந்த வகையில் ஒரு காட்சியில் 90 அடி உயரத்திலிருந்து குதிப்பதற்கு தயாரானேன். எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளாக வயர்கள் உள்ளிட்ட சாதனங்கள் என்னுடன் இணைக்கப்பட்டிருந்தன. அதுவே எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சூழலில் சரி இதுதான் கடைசி என்று நான் நினைத்தேன். அங்கிருந்து குதித்த போது இங்கிருந்து அங்கு வரை எல்லாம் ஸ்லோமோஷனில் நடப்பது போல தோன்றியது” என்று கூறினார் ராஷ்மிகா. தான் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் அந்த சம்பவத்திற்கு பிறகு நடுங்கியபடி கண்ணீர் வடித்ததாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !