பிக்பாஸ் நடிகையை வரவேற்ற பவன் கல்யாண்
பொதுவாகவே பிக்பாஸ் சீசன்களில் இடம்பெறும் போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் நிஜத்தில் ஓரிருவருக்கு மட்டுமே அப்படி வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுவும் சிறிய படங்களாகத்தான் இருக்கின்றன. இந்தநிலையில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-3 போட்டியாளரான ஹிமஜா.
கடந்த சீசன்-3யில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஹிமஜாவுக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் வந்தாலும், தற்போது பவன் கல்யான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளதால் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். மேலும் பவன் கல்யான் படப்பிடிப்பு தளத்திற்கு அவரை வரவேற்று தனது கைப்பட எழுதிய வாசகம் அடங்கிய பேப்பரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பவன் கல்யாணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவருடன் எடுத்துக்கொண்ட செல்பியையும் பகிர்ந்து கொண்டுள்ள அவர், “என் கனவு நனவான தருணம் இது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.