உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் மரியாதைக்குரிய படம் - சிவாஜி, ரஜினி, கமல் குறித்து நடிகை ராதா பேட்டி

முதல் மரியாதைக்குரிய படம் - சிவாஜி, ரஜினி, கமல் குறித்து நடிகை ராதா பேட்டி

கடந்த, 1980 -- 90களில், தமிழ் திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், நடிகை ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என, முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து, வெற்றிப்படங்களை கொடுத்தவர். அவர், நமக்கு அளித்த பேட்டி:

அம்மா சொல்லி தான் நடிக்க வந்தேன். அவர் சொல்லி தான், திருமண வாழ்க்கையும் ஆரம்பமானது. சினிமா, குடும்ப வாழ்க்கை, இரண்டுமே மகிழ்ச்சியாக அமைந்தது. ஆனால், எனக்கு ரொம்ப பிடித்தது, சினிமா தான். நாட்டிலேயே, நம்பர் - 1 சினிமா ரசிகை, நான் தான். எந்த மனநிலையில் இருந்தாலும், சினிமா தான் எனக்கு மருந்து; விருந்து. எல்லா நாயகர்கள், நாயகியருடனும் நடித்துள்ளேன். இரண்டு நாயகியர் கொண்ட படங்களில் நிறைய நடித்துள்ளேன். குறிப்பாக, அக்கா, அம்பிகாவுடன் நிறைய படங்களில் நடித்தேன். யாருடன் நடித்தாலும், நடிப்பதில் தான் போட்டி இருந்தது; பொறாமை இருந்ததே இல்லை.


இப்போதும், 80 - 90களில் நடித்த நாங்கள் அனைவரும் தொடர்ந்து நட்பிலேயே இருக்கிறோம்; சந்தித்துக் கொள்கிறோம். அக்கா உடன் நடித்த போது, செட்டில் அவர் தேவையின்றி பேசவே மாட்டார். எப்படி நடிக்க வேண்டும் என, நானும் அவரிடம் கேட்டதில்லை; அவரும் சொன்னதில்லை. ஆனால், என் உடை, மேக்கப்களில், அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். எனக்கும் சரி; அக்காவுக்கும் சரி, இயக்குனர் சுந்தர்ராஜன் உடனான காம்பினேசன் வெற்றிகரமாக இருந்தது. பாடல், சென்டிமென்ட் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.

சிவாஜி சாருடன், முதல்மரியாதை படம் மறக்கவே முடியாது. சினிமாவில் மட்டுமின்றி, கதாபாத்திரத்திலும் நிஜமாகவே முதல்மரியாதை தரக்கூடிய ஒரு பெரிய மனிதருடன் நடிப்பதற்கு, அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டியிருந்தது. அதற்கே, மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் சினிமா வாழ்க்கையில் முதல் மரியாதைக்குரிய படம் அது.


கமல் சார், மலையாள படங்களிலும் பிரபலம். ஒரு ரசிகையாக, எனக்கு கமல், ட்ரீம் பாய் ஆக தெரிந்தார். சினிமாவுக்கு வந்த பின், அவருடன் இணையாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கமலுக்கு மலையாளம் தெரியும் என்பதால், டயலாக்கை தவிர, இன்னும் கொஞ்சம் அவருடன் பேசலாம். செட்டில் ஜாலியாக இருப்பார். அவர் மட்டுமின்றி, உடன் நடிப்பவர்களின் முகபாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் கற்றுத்தருவார்; ரிகர்சல் பார்ப்பார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடியும் போதும், அவரிடம் புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டு தான் செல்வேன்.

ரஜினியை ரசிகையாக பார்த்த போது, அவரது, ரப் அண்டு டப் தோற்றத்துடன், ஸ்டைல் என்னை வியக்க வைத்தது. ரசிகை என்பதில் இருந்து மாறி இருவருடனும் நடித்த போது, நடிகர்களாக ரஜினி, கமல் யார் என புரிந்தது. இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை தன் ஸ்டைலில் ரஜினி நடிப்பார். ரொம்ப சிம்பிளான மனிதர்.


இந்த இரு உச்ச நட்சத்திரங்களின், ரசிகர்கள் பற்றி அறிந்திருந்தேன். ஆனால், எனக்கும், என்னை போன்றே வெறித்தனமான ரசிகர்கள் உருவாவார்கள் என நினைக்கவில்லை. குறிப்பாக, மதுரையில் எனக்கு ரசிகர்கள் அதிகம். கடிதங்கள், மலைபோல் குவியும். சிலர் ரத்தத்தில் எல்லாம் எழுதி அனுப்புவர். ஒரு ரசிகர், நால்வருடன் சேர்ந்து, என்னை கல்யாணம் செய்து கொள்ள, வீட்டுக்கே வந்து பேசினார். அப்பா உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். முதலில் அவர்களின் அன்பு எனக்கு புரிபடவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகே, ரசிகர்கள் இப்படி தான், நிபந்தனையற்ற காதலை வெளிப்படுத்துவர் என புரிந்தது. இப்போது நினைத்துப் பார்த்தாலும், சிலிர்க்க வைக்கிறது. என்னை, அவர்கள் ஒரு தேவதையாக பார்த்துள்ளனர். இந்த உலகத்திலேயே பிரமாதமானது என்றால், ரசிகர்களின் அன்பை தான் சொல்வேன்.

இப்போது வரும் பிரமாண்ட படங்களை பார்க்கும்போது, ரொம்ப பொறாமையாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களே தோற்றுப்போகும் அளவுக்கு, தமிழில் பிரமாண்ட படங்கள் வருகின்றன. நாம் நடிக்கும் போது, இந்த மாதிரி எல்லாம் ஏன் வரவில்லை என நினைப்பேன். எல்லா முன்னணி நடிகருடனும் நடித்திருக்கிறேன். ஆனால், என் சினிமா காலத்தில், ராமராஜன் உடன் நடிக்கவில்லை. அப்போது அவர், இயக்குனர் ராமநாராயணனின் அசிஸ்டென்ட்டாக இருந்தார். அதன் பின் தான் நடிக்க வந்தார். அவருடன் நடிப்பதற்கான கதைக்களம் அமையவில்லையே தவிர, நானும் அக்காவும், அவர் பணியாற்றிய படங்களில், நிறைய நடித்தோம்.


தமிழ் சினிமாவை பொறுத்தவரை, அன்று நாங்கள் நடிப்பதோடு, அப்படத்தின் வேலை முடிந்து விடும். ஆனால் இப்போது, நடித்து முடித்த பின்னும், அப்படத்திற்காக கலைஞர்கள் உழைக்க வேண்டியுள்ளது. படத்தின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர். இப்போதுள்ள நடிகையர் சுதந்திரமாக முடிவு எடுக்கின்றனர். அவர்களாகவே பார்த்துக் கொள்கின்றனர். நிறைய தன்னம்பிக்கையோடு இருக்கின்றனர். நடிகையருக்கான படங்கள் அதிகம் வருகின்றன.

எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதனால், சின்னத்திரையில் ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறேன். சினிமாவை விட்டு நான், என்றுமே விலகியதில்லை. நான் மீண்டும் சினிமாவுக்கு, எப்படி; எந்த வகையில் வருவேன் என தெரியாது. ஆனால், நிச்சயம் வருவேன். புதிய பரிணாமத்தில் பார்ப்பீர். இவ்வாறு அவர் கூறினார்.


கணவரின் ஓட்டல் தொழில்
நடிகை ராதா கூறியதாவது: என் கணவர் ராஜசேகரன், சின்னதாக கேரளாவில் துவங்கிய ஓட்டல் தொழில், இப்போது வளர்ந்து, மூன்று ஓட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் என, எல்லாமே உள்ளது. நாம் மட்டும் சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி, மற்றவர்களுக்கும் வேலை தர வேண்டும் என நினைத்தோம். என் கணவரின் கனவுகளும் பூர்த்தியாகி வருகிறது. சினிமாவை விட்டு விலகியது, முதலில் ஏக்கத்தை தரவில்லை. மூன்று குழந்தைகள் வளர்ந்த பின், சினிமாவை திரும்பி பார்த்த போது, நான் இவ்வளவு பிசியாக இருந்தேனா என தோன்றியது. மூன்று குழந்தை பெற்று, வளர்த்ததும் ஆச்சரியமான விஷயமாக தெரிந்தது. என் மகள்களின் எதிர்காலத்தை பொறுத்தவரை, அவர்கள் நன்கு படிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யலாம். நான் தடையாக இருக்க மாட்டேன்.

இவ்வாறு கூறினார், ராதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !