தன் புகைப்படத்தைத் தானே கிண்டலடித்த ராதிகா
சினிமாவில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் ராதிகா. 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
லண்டனில் படித்து வந்த மாடர்ன் பெண்ணான ராதிகாவை தனது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க வைத்தவர் பாரதிராஜா. இன்று அப்படத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா, “கிழக்கே போகும் ரயில்', படத்தின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் படப்பிடிப்புப் புகைப்படங்கள். அடுத்த படம், லிப்ஸ்டிக்கை தொந்தரவு செய்யாமல் சிரிப்பதற்காக நான் எடுத்துக் கொண்ட பயிற்சி, இனிமையான நினைவுகள்” என தன்னுடைய புகைப்படத்தைப் பற்றி அவரே கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
சினிமாவில் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.