ஓ.டி.டி., தளம் துவக்கினார் நமீதா
ADDED : 1611 days ago
சென்னை: நடிகை நமீதா உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை திரையிட தனியாக, ஓ.டி.டி., தளம் ஒன்றை துவக்கி உள்ளார்.
கொரோனா தொற்றால் நாடு முழுதும் தியேட்டர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புதுப்படங்களும் வேறு வழியின்றி, ஓ.டி.டி., தளங்களை நாடுகின்றன. சினிமாவின் அடுத்த தளமாக ஓ.டி.டி., மாறி வரும் வேளையில், பலரும் புதுப்புது, ஓ.டி.டி., தளங்களை துவக்கி வருகின்றனர். நடிகை நமீதா, புதிதாக, ஓ.டி.டி., தளத்தை துவக்கி உள்ளார்.
நமீதா தியேட்டர்ஸ் என்ற ஓ.டி.டி., தளத்தில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களை வெளியிடுகிறார். இத்தளத்தின் முதன்மை துாதுவராக நமீதாவும், நிர்வாக இயக்குனராக, வர்த்தகர் ரவி வர்மாவும் உள்ளனர்.
இது குறித்து, நமீதா கூறியதாவது: நான் பெற்ற புகழையும், அன்பையும், ஏதாவது ஒரு வகையில் திருப்பித் தர நினைத்தேன். சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்தபோது தான், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைக்கு என, தனியே ஓ.டி.டி., தளத்தை உருவாக்கும் திட்டத்தை, ரவிவர்மா கூறினார். புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமையும். சிறுபடத் தயாரிப்பாளர்களும், இத்தளத்தில் படங்களை திரையிடலாம். இந்த தளம் அடுத்த மாதம் முதல் இயங்கும் என்றார்.