'விக்ரம்' படத்தில் நடிக்கவே கமல்ஹாசன் ஆர்வம்
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தடைபட்டு நிற்கிறது.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கமல்ஹாசனும் இருவருக்கும் இடையேயான பஞ்சாயத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய தலையீடும் சூட்டைத் தணிக்கவில்லை என்கிறார்கள்.
இதனிடையே, கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தளர்வுகள் வந்தால் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளாராம். லைகா, ஷங்கர் இடையேயான பிரச்சினையை அவர்களே பேசித் தீர்க்கட்டும் என்ற முடிவுக்கும் கமல் வந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள்.
கட்சியில் ஒரு பக்கம் பிரச்சினை எழுந்துள்ளதால் அதைத் தீர்க்கவே கமல்ஹாசன் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், தற்போதைக்கு வேறு பிரச்சினைகளில் அவர் தலையிட விரும்பவில்லையாம். எந்த சிக்கலுமில்லாத 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்த பிறகு 'இந்தியன் 2' பற்றி யோசிக்கும் முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.