பொறுப்பற்ற மக்களே காரணம் - கூல் சுரேஷ்
பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என நடிகர் ‛கூல்' சுரேஷ் கூறியுள்ளார். அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.
காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தவர், ‛கூல்' சுரேஷ், நண்பர்களுடன் இணைந்து நற்பணிகளை செய்து வரும் இவர், ‛பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ முகநுாலில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நிறைய பேர் அரசு மருத்துவமனையையும், நிர்வாகத்தையும் குறை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ‛அரசு மருத்துவமனைக்கு யாரும் வராதீர்கள்' என்றெல்லாம் சொல்கின்றனர். ‛பிணத்தை எரிக்க கூட முடியவில்லை' என்கின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்காமல், ஊரை சுற்றி விட்டு, வியாதியை வாங்கி மற்றவர்களுக்கும் தந்து விட்டு அப்புறம் அம்மாவுக்கு, ஆயாவுக்கு உடல் சரியில்லை என கதற வேண்டியது. குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டக்கூடாது. நோயை மற்றவர்களுக்கு பரப்ப கூடாது என்று தான் ஊரடங்கு போட்டுள்ளனர்.
காய்கறி, மளிகை, மீன்கடை எல்லாம் இன்றோடு மூடி விடுகிற மாதிரி, இன்றே சாப்பிட்டு விட்டு செத்து விட வேண்டும் என்பது போல், முண்டியடித்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குகின்றனர். ஒருவரை நான், ‛எங்கு செல்கிறீர்கள்?' என கேட்டால், ‛துடைப்ப கட்டை வாங்க போகிறேன்' என்கிறார். அவரை அதனாலேயே அடிக்க வேண்டும். அவர் வீட்டில் இருவர் கொரோனாவால் பாதித்துள்ளனர். வெளியே பரவாமல் இருக்க வீட்டில் இருக்க சொன்னால் அவர் வெளியே சுற்றி வருகிறார். இப்படி இருந்தால் கொரோனா எப்படி குறையும்.
அரசு தரும் சில சலுகைகளை நாம் தவறாக பயன்படுத்த கூடாது. தயவு செய்து தேவைக்கு மட்டும் வெளியே போங்கள். நாம் முயற்சித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.