ஷங்கர், லிங்குசாமி வழியில் ஏஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி இயக்குனர்கள் திடீரென தெலுங்குப் பக்கம் சாய்ந்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இயக்குனர் ஷங்கர் அடுத்து தெலுங்கு நடிகரான ராம் சரண் தேஜா நடிக்க உள்ள படத்தையும், இயக்குனர் லிங்குசாமி ராம் பொத்தினேனி நடிக்க உள்ள படத்தையும் இயக்கப் போகிறார்கள். தமிழில் உள்ள சில முன்னணி நடிகர்கள் அவர்களுக்கு கால்ஷீட் தராததுதான் அதற்குக் காரணம். மேலும், தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்கினால், அதை ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடவும் முடியும்.
விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வாய்ப்பை சில பிரச்சினைகளால் வேண்டாமென விலகிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியிடம் பேசி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஆர். முருகதாஸ் இதற்கு முன் தெலுங்கு நடிரான மகேஷ்பாபுவுடன் இணைந்த 'ஸ்பைடர்' பெரும் தோல்விப் படமாக அமைந்தது. இருந்தாலும் அடுத்து அவர் தமிழில் இயக்கிய 'சர்க்கார்' பெரும் வெற்றிப் படமாகவும், 'தர்பார்' சுமார் படமாகவும் அமைந்தது.
ஷங்கர், லிங்குசாமி ஆகியோரது படங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும். அவர்கள் வழியில் ஏஆர் முருகதாஸுக்கும் மீண்டும் தெலுங்கு நடிகர் கிடைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.