குவாலியரில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகில் உள்ள 'உர்ச்சா' என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த நகரத்தில் சதுர்புஜ் கோவில், சாத்ரிஸ், ஜஹாங்கிர் மகால், லட்சுமி நாராயண் கோவில், ராஜ மஹால், ராம் ராஜா கோவில் என பல இடங்கள் உள்ளன. அவற்றில் சில முக்கிய இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. பெத்வா நதிக்கரையில் அமைந்துள்ள அழகான, ரம்மியமான ஊர் உர்ச்சா. அங்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்கள்.
அதற்காக மணிரத்னம், பிரகாஷ்ராஜ், கார்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளனர். உர்ச்சா படப்பிடிப்பு பற்றிய அப்டேட்டை மணிரத்னம், கார்த்தி ஆகியோருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.