உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னது ஸ்ரேயாவுக்கு குழந்தை இருக்கா....! - ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்

என்னது ஸ்ரேயாவுக்கு குழந்தை இருக்கா....! - ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து மழை, சிவாஜி, அழகிய தமிழ்மகன் என பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் கடந்த 2018ல் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோசீவ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ரஷ்யா, இத்தாலி, இந்தியா என மாறி மாறி வசித்து வந்தார். இடையே படங்களிலும் நடித்து வந்தார்.

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா, இப்போது ஒரு செய்தியை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்து ஓராண்டு ஆக போகிறது. இதை சொன்னால் நம்புவீர்களா...! நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை.

ஆம், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரேயாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து, அது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குழந்தையை கொஞ்சி விளையாடுகின்றனர் ஸ்ரேயாவும், ஆண்ட்ரியும்.... கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்திலேயே ஸ்ரேயா கர்ப்பமாக இருந்த பேபி பம்ப் போட்டோவையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

மேலும், ‛‛2020ம் ஆண்டு உலகமே ஊரடங்கு காலத்தில் கலக்கத்தில் இருந்தபோது எங்களது வாழ்க்கை மிகவும் அழகாக, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மாறியது. எங்கள் வாழ்வில் அழகான தேவதை வந்தார். கடவுளுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா, கணவருடன் அடிக்கும் லூட்டிகளை போட்டோ, வீடியோவாக வெளியிடுவார். அப்படிப்பட்டவர் குழந்தை பிறந்து ஓராண்டு ஆகும் நிலையில் இவ்வளவு நாள் ரகசியம் காத்தது ஏனோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !