ஹரி ஹர வீரமல்லு
தயாரிப்பு : மெகா சூர்யா புரடக்சன்
இயக்கம் : கிரிஷ், ஜோதி கிருஷ்ணா
நடிப்பு : பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபிதியோல், சத்யராஜ்
இசை : கீரவாணி
ஒளிப்பதிவு : மனோஜ் பரம்ஹம்சா, ஞானசேகர்
வெளியான தேதி : ஜூலை 24, 2025
நேரம் : 2 மணிநேரம் 43 நிமிடம்
ரேட்டிங்: 2.5 / 5
முகலாய மன்னர் அவுரங்கசீப், கோகினூர் வைரம், வீரம் மிக்க திருடன் பின்னணியில் உருவான ஒரு கற்பனை கதை ஹரி ஹர வீரமல்லு. தெலுங்கில் உருவானாலும் தமிழில் டப்பாகி உள்ளது. எம்ஜிஆர் பாணியில் வசதி படைத்தவர்களிடம் திருடி, ஏழை மக்களுக்கு நல்லது செய்கிறார் ஹரி ஹர வீரமல்லு என்ற பெயர் உடைய வீரனான பவன் கல்யாண். டில்லி பேரரசரான அவுரங்கசீப் மயிலாசனத்தில் இருக்கும் உலகப்புகழ் கோகினூர் வைரத்தை திருட முயற்சிக்கிறார். அது ஏன்? அந்த திட்டம் வெற்றி அடைந்ததா? உண்மையில் வீரமல்லு யார்? அவருக்கும், அவுரங்கசீப்புக்கும் என்ன பகை என்பதை உண்மையான சில வரலாற்று பின்புலத்தில் கற்பனை, வீரம், காதல், இந்திய பண்பாடு, கலாச்சாரம், தெய்வ நம்பிக்கை கலந்து விவரிக்கிறது இந்த கதை
ஜோதி கிருஷ்ணா இயக்கி இருந்தாலும் , சில பாகங்களை கிரிஷ் இயக்கியுள்ளார். சின்ன வைரங்களை திருடும் பவன் கல்யாண், கோல்கொண்டா அரசர் திட்டப்படி புகழ்பெற்ற வைரமான கோகினூரை திருட டில்லி செல்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பது முதல் பாக கதை. ஆம், அடுத்த பாகமும் உண்டு.
ஆக் ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் கலக்குகிறார் பவன். அவர் அறிமுகம் ஆகும் ஸ்டைலிசான சண்டை, உக்கிரமான கிளைமாக்சுக்கு முந்திய சண்டை, வைரத்தை திருடும் சார்மினார் பேக்கிரண்ட் சண்டை காட்சி, அந்த மல்யுத்தம் ஆகியவை படத்தின் ஹைலைட். படத்தில் வரும் தெய்வ நம்பிக்கை, இந்து மதத்துக்கு ஆதரவான பல சீன்கள் அவர் சிந்தனை, வசனங்கள் அவர் அரசியல் சார்புடையது. ஆனால் சினிமாவில் அதை ஓபனாக சொல்லி இருப்பதும், அவுரங்கசீப் மீதான விமர்சனங்களும் பல விவாதங்களை, சச்சரவுகளை உருவாக்கும்.
வேதங்கள், குரு, இந்து மத நம்பிக்கைகள், வழிபாடு குறித்து படத்தில் சொல்லப்படும் ஆழமான விஷயங்கள், கருத்துகள், பவன் கல்யாண் என அதிரடிகாரருக்கு சொந்தமானவை. இப்படி எந்த ஹீரோவும் தைரியமாக பேச வாய்ப்பில்லை. அதில் பல வரலாற்று உண்மைகளும் இருக்கதான் செய்கின்றன. அதேசமயம் சிலசமயம் அது ஓவர் டோஸ் ஆகி இருக்கிறது. அது எதிர்தரப்பினருக்கு பிடிக்காமல் போகலாம்
பஞ்சமி என நாட்டியகாரியாக வரும் ஹீரோயின் நிதி அகர்வால், ‛தாரா தாரா' பாடலில் மனதை அள்ளுகிறார். அவருக்கான அந்த டிவிஸ்ட், அடுத்த வரும் காட்சிகள் செம. பேரரசர் அவுரங்கசீப் ஆக வரும் பாபி தியோல் சைலண்டாக மிரட்டி இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் பயர். என்ன அவ்வளவு பெரிய பேரரசர் , சிலசமயம் பேட்ட தாதா மாதிரி வசனம் பேசுவதை, ஒரு திருடனுடன் மோத நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நிஜத்தில் பக்கா நாத்திகவாதியான சத்யராஜ், இந்து மதத்தை, காப்பாற்ற துடிக்கும் குருவாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட சீன்கள் ஓகே. அந்த மழை வரும் யாக சீன் டச்சிங். ஞானசேகர், மனோஜ் பரமஹம்சா கேமரா வொர்க் சூப்பர். ஏகப்பட்ட தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் இருக்கிறார்கள், பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
படத்தின் பிளஸ் என்றால் 16ம் நூற்றாண்டை தத்ரூபமாக கொண்டு அந்த ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியும், அற்புதமான இசையை கொடுத்த இசையமைப்பாளர் கீரவாணியும்தான். அரண்மனை செட், சார்மினார் செட், கிளைமாக்சில் வரும் அந்த நகரம் செட், தர்பார், அரண்மனை செட் அபாரம்
பாடல்களில், பின்னணி இசையில் தனி முத்திரை பதித்து இருக்கிறார் கீரவாணி.
திருட்டு, வைரம், காதல், சண்டை என முதல் பாகம் வேகமாக, விறுவிறுப்பாக ஓடுகிறது. ஆனால் அடுத்த பாகம் இழுக்கிறது, போரடிக்கிறது. திணிக்கப்பட்ட, செயற்கையான சில விஷயங்கள் கதை வலு இழுக்க செய்கிறது. அதிலும் அந்த கிளைமாக்ஸ், பாபி தியோல், பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட கற்பனை, அதில் வரும் காட்சிகள் , யப்பா முடியலை. சினிமா என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா? கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் சுமார்.
முகலாயர் காலத்தில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள், எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை துணிந்து சொல்லி இருக்கிறார்கள். அந்த காலத்தில் நடந்த சில வரலாற்று உண்மைகளை, கொடுமைகளை, தண்டனைகளை சொன்னது. ஆனாலும் அதை வேறு மாதிரி அல்லது உணர்ச்சி பூர்வமாக சொல்லி இருக்கலாம். கொஞ்சம் பிரசார நெடியில், திணிந்து சொல்லி இருப்பது மைனஸ் ஆக இருக்கிறது. காட்டில் ஓநாய் சம்பந்தப்பட்ட சீன், பேரரசுடன் நேருக்கு நேர் மோதுவது, கட்டடங்களுக்கு இடையே ஈசியாக ஜம்ப் பண்ணுவதெல்லாம் பவன் கல்யாண் படங்களில் தான் சாத்தியம்.
பாகுபலி மாதிரி வர வேண்டும் என நினைத்து உருவாக்கிய படம் பாதியில் தத்தளிக்கிறது. ஓவர் பில்டப், ஓவர் ஹீரோயிசம். ஓவர் கருத்து திணிப்பால் தடுமாறுகிறது. கமர்சியல் சினிமாவில் தனது அரசியல், தனிப்பட்ட கருத்துகளை திணித்து, அதையும் சரியாக சொல்ல முடியாமல் தத்தளித்து இருக்கிறார் பவன் கல்யாண். அடுத்த பாகம் எப்படி இருக்குமோ? அவுரங்க சீப்பும், பவன் கல்யாணும் பின்னிமில்லில் ஒற்றைக்கு ஒற்றை சண்டை போடுவார்களோ என பயம் வருகிறது.
ஹரி ஹர வீரமல்லு - பவன் கல்யாண் கோபம், படம் பார்ப்பவர்கள் கொஞ்சம் பாவம்