தலைவன் தலைவி
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் : பாண்டிராஜ்
நடிப்பு : விஜய்சேதுபதி, நித்யாமேனன், யோகிபாபு, தீபாசங்கர், காளிவெங்கட் மற்றும் பலர்
இசை : சந்தோஷ்நாராயணன்
ஒளிப்பதிவு : சுகுமார்
வெளியான தேதி : ஜூலை 252025
நேரம் : 2 மணிநேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
மதுரை அருகே உள்ள குல தெய்வ கோயிலில், தனது பெண் குழந்தைக்கு முதல் மொட்டை போட, பெற்றோர்களுடன் வருகிறார் நித்யா மேனன். அவரை பிரிந்து இருக்கும், அசைவ ஓட்டல் நடத்தும் விஜய் சேதுபதியும் அவர் பெற்றோர்களும் 'எங்களை அழைக்காமல் மொட்டை போடுவதா' என சண்டைக்கு போகிறார்கள். இடையில் இரு தரப்பு உறவினர்களும் வந்து வாய்ஸ் கொடுக்க, சண்டை பெரிதாகிறது. அந்த சண்டையில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னை, பிரிவு, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மனஸ்தாபங்கள், அடிதடி, போலீசில் புகார் என பல விஷயங்கள் விரிகின்றன. ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க பெரியவர்கள் முயற்சிக்க, இதற்கிடையே இன்னும் சில பஞ்சாயத்துகள் அங்கே வர , அவர்களால் ஏரியா களை கட்ட கோயில் வளாகம் அமர்களமாகிறது. கடைசியில் கருப்பு கோயிலில் என்ன நடந்தது? விஜய் சேதுபதி, நித்யா மேனன் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பதை மண் மணத்துடன் பாண்டிராஜ் காட்டியிருக்கும் படம் தலைவன் தலைவி.
குல தெய்வம் கோயில் வளாகத்தில் சில மணி நேரம் நடக்கும் வாக்குவாதம், குடும்பசண்டை, பஞ்சாயத்து, அடிதடி தான் முழு படமும். அதை கிளைக்கதைகளாக, பிளாஷ்பேக்குடன் புதுவித திரைக்கதையுடன் விரிவாக படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முழு படத்தை பில்லர் மாதிரி தாங்கி நிற்பது ஆகாசவீரனாக வரும் விஜய் சேதுபதியும், பேரரசியாக வரும் நித்யா மேனனும் தான். கிராமத்து தம்பதிகளுக்கே உரிய கோபம், பாசம், வீரத்துடன் இரண்டு கேரக்டர்களும் காதலிக்கிறார்கள், மோதுகிறார்கள். பாசத்தால் பொங்குகிறார்கள். இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாராவுக்கு பின் பக்கா எனர்ஜியுடன், துறுதுறுவென வசனம் பேசுகிறார், ஆடுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார் விஜய் சேதுபதி. திடீரென சரண்டர் ஆகி மன்னிப்பும் கேட்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் நடிப்பில் ரவுண்டு கட்டி அடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
தேசிய விருது வாங்கிய நடிகையான நித்யா மேனன் பாசக்கார மனைவியாக, கோபக்கார மனைவியாக வாழ்த்து இருக்கிறார். விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ், குடும்ப சண்டை, பிரிவில் புலம்புவது என கலக்கியிருக்கிறார். அவர் கெட்அப்பும், பாடிலாங்குவேஜ் அக்மார்க் வீரமிக்க தமிழச்சிகளை பிரதிபலிக்கிறது. அதிலும் அவரின் குரல், குளோசப் ஷாட் சூப்பர்.
படத்தில் ஆங்காங்கே வந்து போகிறார் திருடனாக வரும் யோகிபாபு. ரொம்ப நாளைக்குபின் அவர் காமெடி ரசிக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும்போது நீங்க நினைக்கிற மாதிரியான ஆட்கள் இல்லை, இவங்க என பன்ச் கொடுத்து சிரிக்க வைக்கிறார். சண்டையை விலக்கிவிட வரும் காளி வெங்கட் கேரக்டரும், தான் ஏன் அதை செய்கிறேன் என அவர் பேசும் உருக்கமான வசனமும் வாவ்.
இவர்களை தவிர, நித்யா மேனன் பெற்றோர்களான செம்பன் வினோத், ஜானகி, விஜய் சேதுபதி அப்பாவாக வரும் பருத்திவீரன் சரவணன், மச்சனாக வரும் ஆர்.கே.சுரேஷ், தங்கை ரோஷிணியும் தங்கள் பங்கிற்கு படத்துக்கு நல்ல பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். விஜய் சேதுபதி அம்மாவாக வரும் தீபா, நம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் அம்மா. அவர் மகன், மருமகளை நினைத்து பொங்குவதும், புலம்புவதும் வெல்டன். இவர்களை தவிர, அந்த சின்ன அசைவ ஓட்டல் ஒரு கேரக்டராக வருகிறது. நித்யா மேனன் ஆர்டர் எடுக்கும் சீன், அந்த கல்லா சீன், முறைப்பெண் சீன், காமெடிகள் மனதில் நிற்கிறது. கதையுடன் கலந்து இருக்கிறது பரோட்டா. அதை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறது.
பாடல்காட்சி தொடங்கி ஓட்டல், வீடு, கோயில் என பல முக்கியமான இடங்களில் படத்தை அழகாக்கி இருக்கிறது சுகுமார் கேமரா வொர்க். பொட்டல முட்டாய் பாடல் கொள்ளை அழகு. சந்தோஷ் நாராயணன் இசை படத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று இருக்கிறது.
குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை சொல்லும் படம், படத்திலும் சண்டை இருக்கிறது. அதில் கத்தலாம், சவுண்டு விடலாம். ஆனால், படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின், அவர்களின் பெற்றோர்கள், மற்ற கேரக்டர்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு டயலாக் மாதிரி. 'அவங்க பேசதானே செய்யணும், ஏன் கத்துறாங்க' இயக்குனரே. அதனால் படம் முடிந்தபின் நமக்குள் அப்பாடா சண்டையை நிறுத்திட்டாங்க என்ற பெரு மூச்சு எழுகிறது. ஒரு குடும்பத்தில் பிரச்னை இருக்கலாம். பிரச்னையே குடும்பம் மாதிரியான காட்சிகள் நாடகத்தனம். அதிலும் கிளைமாக்சில் போலீஸ், கோர்ட் மீண்டும் சண்டை இதெல்லாம் பக்கா சினிமாதனம். இன்னும் உணர்ச்சி பூர்வமாக கொடுத்து இருக்கலாம். ஹரி படம் சண்டைபோல ஆட்கள் வந்து கொண்டே இருப்பது அயர்ச்சி.
ஆனாலும், நம் மண் மணத்துடன், உறவுகளின் குணங்கள், குடும்ப பிரச்னைகளை சொல்லி 'எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசுங்க. சம்பந்தப்பட்டவர்களுடன் பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும்' என்ற நச் கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். சின்ன சண்டைகள் பெரிதாகும், டைவர்ஸ் எதற்கு என கேள்வி கேட்கிறார். கண்டிப்பாக, இந்த படம் பார்க்கும்போது நம் குடும்பத்தில், நம் பக்கத்து வீட்டில் நடந்த பாசக்கதைகள், மனஸ்தாபம், சண்டை சச்சரவு, சில கேரக்டர்கள் நினைவில் வந்து போகும். நம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் சொந்தங்களுக்கு போன் போட்டு மனம் விட்டு பேசிடணும், பிரச்னையை முடிச்சிடணும்ங்கிற எண்ணம் வந்துபோகும். அதுதான் ஒரு படைப்பின் வெற்றி.
தலைவன் தலைவி - மதுரை முனியாண்டி விலாசில் காரசார விருந்து சாப்பிட்ட பீலிங்