மகாஅவதார் நரசிம்மா
தயாரிப்பு : ஹோம்பாலே பிலிம்ஸ்
இயக்கம் : அஸ்வின்குமார்
இசை : சாம்.சி.எஸ்.
வெளியான தேதி : ஜூலை 25, 2025
நேரம் : 2 மணிநேரம் 11 நிமிடம்
ரேட்டிங்: 3.5 / 5
எத்தனையோ தலைமுறையாக நாம் கேட்ட, பல படங்களில் பார்த்த விஷ்ணுவின் வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் தோன்றிய கதையை, அனிமேஷனில் அழகாக சொல்லும் படம் மகாஅவதார் நரசிம்மா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. அஸ்வின்குமார் இயக்க, ஜெயபூர்ணா தாஸ், அஷ்வின் குமார், ருத்ர பிரதாப் கோஷ் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
காசியப்ப முனிவர், திதி தம்பதியினருக்கு தவறான நேரத்தில் உருவானவர்கள் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற 2 அசுர சகோதரர்கள். இவர்கள் இருவரும் விஷ்ணுவை அழிப்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், இவர்களால் விஷ்ணுவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைக்கிறான் அண்ணனான ஹிரண்யாக்ஷன், வராக அவதாரம் எடுத்து அவனை கொன்று பூமியை காப்பாற்றுகிறார் விஷ்ணு. தம்பியான ஹிரண்யகசிபு பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்து தன்னை மனிதர்களோ, விலங்குகளோ கொல்லக்கூடாது, பகலிலோ, இரவிலோ கொல்லக்கூடாது, மாளிகையிலோ, வெளியிலோ கொல்லக்கூடாது. உயிருள்ள, உயிரற்ற ஆயுதங்களால் கொல்லக்கூடாது போன்ற வரங்களை வாங்குகிறான். தேவர்களை, விஷ்ணு பக்தர்களை துன்புறுத்தி ஆட்சி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறான்.
அவனுக்கு மகனாக பிறக்கும் பிரகலாதனோ, கருவிலே விஷ்ணு நாமம் கேட்டு வளர்கிறான். தந்தை ஹிரண்யகசிபுவை கடவுளாக அந்த நாட்டு மக்கள் மதிக்க, அவனோ விஷ்ணுவை வணங்குகிறான். விஷ்ணுவை புகழ்கிறான். சும்மா இருப்பானா ஹிரண்யகசிபு மகனை துன்புறுத்துகிறான். பலவழிகளில் கொல்ல முயற்சிக்கிறான். தன் தீவிர பிரகலாதனை அனைத்து இடங்களிலும் விஷ்ணு காப்பாற்றுகிறார். கடைசியில் இந்த துாணில் உன் விஷ்ணு இருப்பாரா என மகனிடம் கேட்க, அவர் எங்கும் இருப்பார் என பிரகலாதன் பதில் சொல்ல, துாணை உடைக்கிறான் ஹிரண்யகசிபு. அதிலிருந்து உக்கிரமான நரசிம்ம அவதாரத்தில் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யகசிபுவை அவன் வாங்கிய வரங்களின் படியே, புத்திசாலிதனமாக கொல்கிறார். இதுதான் மகாஅவதாரர் நரசிம்மாவின் கதை. இதை ஆயிரக்கணக்கான வல்லுனர்கள் உழைப்பில் நேர்த்தியுடன் அனிமேஷனில் உருவாக்கி இருக்கிறார் அஸ்வின்குமார். 2டி, 3டியில் வந்துள்ளது. 3டியில் பார்ப்பது இன்னும் நல்லதொரு சினிமா அனுபவத்தை தருகிறது.
கஷ்யப்பர், திதி வழியாக இந்த இரண்டு அசூர சகோதரர்கள் உருவாவதில் இருந்து கதை தொடங்கிறது. வராக அவதாரம் தோன்று காட்சிகள், கடலுக்குள் ஹிரண்யாக்ஷன், வராக அவதாரத்தில் இருக்கும் விஷ்ணுவுக்குமான சண்டைக்காட்சிகளை அவ்வளவு அற்புதமாக காண்பிக்கிறார்கள். அடுத்து ஹிரண்யகசிபு வளர்ச்சி, பிரகலாதன் பிறப்பு காட்சிகள் என கதை விரிகிறது. அனிமேஷன் படம் என்றாலும் பிரகலாதன் உருவம், வாய்ஸ், அந்த சிறுவனின் உடல்மொழி அவ்வளவு அழகு.
விஷ்ணு மீதான பிரகாலதன் பக்தி, தந்தையின் கோபம் ஆகியவை என சீன்கள் வேகமாக நகர்கின்றன. பிரகாலதனை ஆயுதத்தால் கொல்ல முயற்சிப்பது, மதம் பிடித்த யானையை மிதிக்க வைத்து கொல்ல நினைப்பது, கடலில் தள்ளி கொல்ல திட்டமிடுவது ஒவ்வொரு முறையும் அவனை விஷ்ணுவின் அருள் காப்பாற்றுகிற காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. கடலில் பிரகலாதனுக்கு விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கிறது. அந்த காட்சிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. அனிமேஷன் படம் என்பதை மறந்து, பக்தியுடன் தரிசிக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக அதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் படக்குழுவினர். அரண்மனை, அசுரர்கள், காடு, மலை, கடல், குருகுலம் என ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். கடைசியில் ஹிரண்யகசிபு அரண்மனையில் துாணில் இருந்து நரசிம்ம அவதாரம் தோன்றும் காட்சிதான் படத்தின் ஹைலைட்.
இதுவரை நாம் எத்தனையோ படங்களில் ஆக்ரோஷமான நரசிம்மரை பார்த்து இருப்போம். அவர் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் காட்சிகளை ரசித்து இருப்போம். இதில் அதைவிட ஆக்ரோஷமாக, மாறுபட்ட வடிவில் ஹிரண்யகசிபுவை துரத்தி, துரத்தி, அடித்து துவைத்து பறந்து சண்டை போடுகிறார் நரசிம்மர். அந்த சண்டைகாட்சிகளின் பின்னணி பக்கா ஆக்ஷன் படம் மாதிரி இருக்கிறது. பல கோணங்களில் நரசிம்மர் கோபத்தை, சண்டையின் வீரியத்தை காண்பிப்பது சபாஷ். கடைசியில் அவனை குடலை கிழித்து சம்ஹாரம் செய்கிறார். அந்த காட்சியை வடிவமைத்த படக்குழுவை மனதார பாராட்டலாம். கடைசியில் பிரகலாதன் பக்தியால் சாந்தமடைவதுடன் கதை முடிகிறது. அடுத்து பரசுராமர் கதையை சொல்லப்போகிறோம் என முடித்துவிட்டு, பல்வேறு நரசிம்மர் கோயில்கள் பற்றி தகவல்களுடன் படத்தை பக்தி பெருக்குடன் விடை பெறுகிறோம். பக்திமார்க்கத்தின் சிறப்பை, 5வயது குழந்தையான பிரகலாதன் பக்தியை மெச்சி விஷ்ணு தரிசனம் கொடுப்பதை, அவனுக்காக அவதாரம் எடுப்பதை ஆன்மிக நடையில் அழுத்தமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அனிமேஷன் படம் என்பதால் குழந்தைகளுக்கு புரியும் மொழியில், அவர்கள் விரும்பும் வகையில் எளிமையான காட்சி அமைப்புகள் உள்ளன. பாடல்களில், வசனங்களில் பக்தி மணம் கமழ்கிறது. பிரகலாதன், ஹிரண்யகசிபு, விஷ்ணு, நரசிம்மர், வராகமூர்த்தி, பிரகலாதன் தாய், ஹிரண்யகசிபு சகோதரன், சகோதரி, குருமார்கள், கடவுள்கள் என ஒவ்வொரு கேரக்டரிலும் அவ்வளவு டீடெயில்கள், ஆடை, ஆபரணங்களில் வேலைபாடுகள். கதையில் விஷ்ணு நாமம் சொல்லும் பல்வேறு சமஸ்கிருத வசனங்கள், ஸ்லோகங்கள் இடம் பெறுவது பார்வையாளர்களை ஒருவித பக்தி மனநிலைக்கு கொண்டு செல்கின்றன. வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், விஷ்ணு தோன்று காட்சிகளில் நம்மை அறியாமல் கை கூப்ப வைக்கின்றன. குடும்பத்துடன், குழந்தைகளுடன் சென்றால் விஷ்ணு அவதார தரிசனத்தை, பக்தி மார்க்கத்தின் சிறப்பை ரசித்து, உணரலாம்.
மகாஅவதார் நரசிம்மா : இது படமல்ல, விஷ்ணு மகிமை சொல்லும் பக்தி காவியம்