ஹவுஸ்மேட்ஸ்
தயாரிப்பு : எஸ்.விஜயபிரகாஷ், சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ்
இயக்கம் : டி.ராஜவேல்
நடிப்பு : தர்ஷன், ஆர்ஷா பைஜூ, காளிவெங்கட், வினோதினி
இசை : ராஜேஷ் முருகசேன்
ஒளிப்பதிவு : எம்.எஸ்.சதீஷ்
வெளியான தேதி : ஆகஸ்ட் 1, 2025
நேரம் : 2 மணிநேரம் 09 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
காதல் திருமணம் செய்யும் தர்ஷன், ஆர்ஷா ஜோடி, லோனில் ஒரு பழைய பிளாட்டை வாங்குகிறார்கள். அதில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. பேய் இருக்கிறது என்று பயப்படுகிறார் ஆர்ஷா. கடைசியில், தங்கள் வீட்டில் இன்னொரு குடும்பமும் வசிப்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. அப்படி வசிக்கும் காளிவெங்கட், வினோதினி ஜோடி தர்ஷன், ஆர்ஷாவை பேய் என நினைக்கிறார்கள். ஒரு சுவர் மூலமாக இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்போது காளிவெங்கட் தம்பதியினர் 2012ம் ஆண்டிலும், தர்ஷன் தம்பதியினர் 2022ம் ஆண்டிலும் ஒரே வீட்டில் வசிப்பது தெரியவருகிறது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே புதுப்புது பிரச்னைகள் வருகின்றன. யாராவது ஒருவர் வீட்டை காலி பண்ண வேண்டிய நிலை. அது எப்படி 'இப்படி' நடக்கும்? கடைசியில் என்னதான் நடந்தது என்பதை இதுவரை தமிழில் சொல்லப்படாத கதையை ஹவுஸ்மேட்ஸ் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல்.
ஒரே வீட்டில் 2 காலகட்டத்தில் வசிக்கும் 2 ஹவுஸ்மேட்ஸ் கதை என்ற லைனை, பேய், அறிவியல், காமெடி, சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறார் ராஜவேல். படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன் வெளியிடுகிறது. தர்ஷன், ஆர்ஷா காதல், வீட்டில் பிரச்னை, தடையை மீறி திருமணம், தனிக்குடித்தனம் என வழக்கமாகதான் ஆரம்பிக்கிறது கதை. தனது வீட்டில் பேய் இருக்கிறது என ஆர்ஷா பயப்பட ஆரம்பிக்க, கதை சூடுபிடிக்கிறது. அதை தர்ஷனும் நம்ப ஆரம்பித்து 'சுவர்' என்ற மீடியம் மூலமாக எதிர் தரப்புடன் இவர்கள் பேச ஆரம்பிக்க, கதை இன்னும் விறுவிறுப்பாகிறது. இடைவேளைக்குபின் ஒரே வீட்டில் 2 காலகட்டத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பதை காமெடியாக சொல்லி, கடைசியில் மனம் கலங்க வைக்கும் ஒரு சென்டிமென்ட்டுன் படத்தை முடிக்கிறார் இயக்குனர்
படத்தை தாங்கி பிடிப்பது காளி வெங்கட், வினோதினி, அவர்கள் மகனாக நடித்த மாஸ்டர் ஹென்ரிக் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். இந்த மூவரும் தர்ஷன், ஆர்ஷா தரப்பால் அனுபவிக்கிற டார்ச்சர், சண்டைகள், சில சூழ்நிலைகள் படத்தின் பிளஸ். அதிலும் பேயை விரட்ட அவர்கள் 3 மத பிரார்த்தனை செய்யும் காட்சிகள் சிறப்பான சம்பவம். குறிப்பாக, காளிவெங்கட், வினோதினி நடிப்பும், கிளைமாக்சில் அவர்கள் கலங்குகிற சீனும் சூப்பர். பல இடங்களில் சிரிக்கவும் வைத்து இருக்கிறார்கள். தர்ஷன் ஓகே, புதுமுக ஹீரோயின் ஆர்ஷா அழகாக இருக்கிறார். நடிப்பும் கொஞ்சம் அப்படி. இவர்களை தவிர, நண்பர்களாக வரும் அப்துல் லீ, தீனாவும் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்கள்.
பிரேமம் புகழ் ராஜேஷ் முருகேசன் இசை சுமார் ரகம். இப்படியொரு வித்தியாசமான கதையை, குழப்பமில்லாமல் காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ். பேய் வீட்டை வாங்க வருகிற காட்சியில் காமெடி நடிகர் டிஎஸ்ஆர் சீனிவாசன் பிரித்து மேய்ந்துவிட்டார், அவ்வளவு சிரிப்பு. இரண்டு காலகட்டத்தில் ஒருவரை தேடி, மற்றவர்கள் அலைகிற காட்சிகள் செட்டாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு என்ற விஷயத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி இருக்கலாம். அதில் மாற்றம் தெரியவில்லை. விஞ்ஞானத்தில் அப்படி நடக்கும், இப்படி முடிக்கணும் என்று சொல்வதெல்லாம் எடுபடவில்லை.
இது பேய் கதையும் அல்ல, டைம் டிராவல் கதையும் அல்ல, இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு விஞ்ஞான ரீதியிலான பேன்டசி கதை. அதை குடும்ப சென்டிமென்ட், காதல், காமெடி கலந்து கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிவியல் பூர்வமாக விஷயம்தான் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது. சில கேரக்டர்களை வைத்து அப்படி நடந்து இருக்கும், இப்படி நடக்கும், இப்படி முடிக்கணும் என்று இயக்குனர் விளக்கினாலும், ஒரு கட்டத்தில் அட போங்கப்பா இது புரியலை. இப்படியெல்லாம் நடக்குமா என்று நமக்கும் தோன்றும் எண்ணம் படத்தின் மைனஸ். இப்படிப்பட்ட விஷயங்களை இன்னும் எளிமையாக்கி இருக்கலாம். பார்வையாளர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை தவிர்த்து இருக்கலாம். முதலில் இரண்டு குடும்பங்களும் சுவர் மூலமாக எழுதி பேசுகிறார்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் பேசுவது மாதிரி சர்வசாதாரணமாக பேசிக் கொள்கிறார்கள். இதெப்படி நடக்கும் என்று பிடிபடவில்லை. முதற்பாதி இழுத்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நேரம் கழித்துதான் கதைக்கு வருகிறார்கள். அதுவரை படம் பார்க்க பொறுமை வேண்டும். அந்த அமானுஷ்ய மிரட்டல்கள் எத்தனையோ படங்களில் பார்த்து சலித்தது.
ஒரே வீட்டில் இரண்டு காலகட்டத்தில் வசிக்கும் 2 குடும்பங்களின் கதை என்று மாறுபட்ட கோணம், இரண்டுபேரும் சண்டைபோடுவது, கிளைமாக்ஸ் பாசக்கதை ஆகியவை படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தில் தேவையில்லாத ஏகப்பட்ட சீன்கள், அதையெல்லாம் பார்க்க பொறுமை இருந்தால், இது எப்படி நடக்கும், இதெல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்காத மனநிலை இருந்தால் ஹவுஸ்மேட்ஸ் கொஞ்சம் பிடிக்கும்.
ஹவுஸ்மேட்ஸ் : இது பேய் கதை மாதிரி, ஆனா, அறிவியல் கதை!