உள்ளூர் செய்திகள்

அனோமி

தயாரிப்பு: குமார், அபிஷேக், பாவனா, ஆதித்
இயக்கம்: ரியாஸ் மராத்
நடிப்பு: பாவனா, ரகுமான், ஷிபின், அர்ஜூன்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
வெளியான தேதி: மார்ச் 6, 2026
நேரம்: 2 மணி 32 நிமிடங்கள்
ரேட்டிங்: 3.5 / 5

தடயவியல் நிபுணரான பாவனாவின் தம்பி உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். 3 பேருக்கும் மனநிலை பாதிப்பு இருக்கிறது. அதற்கான ட்ரீட்மென்ட்டில் இருப்பதால் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் நினைக்கிறது. அது, தவறு, இது கொலை என்று சொல்லும் பாவனா, கொலையாளியை கண்டுபிடிக்க அலைகிறார். ஒரு கட்டத்தில் உண்மையை உணர்ந்த போலீஸ் அதிகாரி ரகுமானும் கொலைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கிறார். பல உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அவர்கள் இறக்க காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதே ரியாஸ் மாரத் இயக்கத்தில் மலையாளத்தில் வந்த அனோமி படம். தமிழிலும் இந்த படம் டப்பாகி வெளியாகி உள்ளது. உளவியல் ரீதியிலான, நெறிமுறையற்ற சமூக மனநிலையை அனோமி என்ற சொல் குறிக்கிறது.

பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறக்க, மனநிலை பாதிப்புக்கு ஆளாகும் தம்பியை பாசமாக வளர்க்கிறார் பாவனா. திடீரென ஒருநாள் அவன் காணாமல் போக, பாவனா தவிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பாவனா நடிப்புக்கு இந்த கதை நல்ல களம் அமைத்துகொடுத்து இருக்கிறது. தம்பி பாசம், அவனை தேடுவது, அவர் இறந்தவுடன் தவிப்பது, தடயவியல் நிபுணராக பல விஷயங்களை கண்டுபிடிப்பது, போலீஸ் அதிகாரி ரகுமானுடன் மோதல் என பல இடங்களில் ஓவர் ஆக்டிங் இல்லாத இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

கொலையாளிகளை பாவனா கண்டுபிடிக்கும் இடங்களை புத்திசாலிதனமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அவரை பல இடங்களில் அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். சோகமான, துப்பறியும் சீன்களில் கூட அவரின் முகம் பிரஷ் ஆக இருக்கிறது. காஸ்ட்யூம், நடிப்பு ஈர்க்கிறது. இடைவேளைக்குபின் பாவனாவை விட, ரகுமானுக்கு கதையில் முக்கியத்துவம். ஆனாலும், ஒரு முக்கியமான இடத்தில் மீண்டும் கலக்கியிருக்கிறார் பாவனா. அந்த டுவிஸ்ட் யாரும் எதிர்பாராததுது. நீண்ட காலத்துக்குபின் பாவனாவுக்கு பக்காவான படம் செட்டாகி இருக்கிறது.

முதலில் கோபக்கார, வேலையில் அக்கறை இல்லாத போலீஸ் அதிகாரி மாதிரி வந்தாலும், 3 கொலைகள் நடந்தவுடன் பரபரப்பாகிறார் ரகுமான். கொலையாளை அவர் தேடி செல்லும் இடம், இவர்தான் கொலையாளி என கண்டுபிடிக்கும் இடம் பிரமாதம். ஆக் ஷன் காட்சிகளிலும் பின்னி எடுத்து இருக்கிறார். இவர்களை தவிர, பாவனா தம்பியாக வரும் ஷெபின், காதலனாக வரும் அர்ஜூன், போலீஸ் அதிகாரி, டாக்டர் என பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன. மலையாள படம் என்பதால் அனைவரும் அமைதியாக, கேரக்டரின் தன்மையை உணர்ந்து நடித்து இருப்பது சிறப்பு. வில்லன் காண்பிக்கும்விதம், அவன் நோக்கம், அவன் பேசும் விஷயங்கள் படத்தின் ஹைலைட்டான விஷயங்கள். படத்தின் தயாரிப்பாளர் பாவனா என்றாலும் அவருக்கு தனி பில்டப் சண்டைக்காட்சிகள் வைக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது இன்னும் பிளஸ். டாக்டராக வரும் பாவனா காதலனும் ஒரு கட்டத்தில் மிரட்டுகிறார்.

காதல், காமெடி, சென்டிமெண்ட், கலகலப்பு, கல்யாண வீடு, பார்ட்டி என போன்ற வழக்கமான விஷயங்கள் இல்லாமல் முழுக்க, முழுக்க ஒரே ஜானரில் அதாவது சஸ்பெஸ்ஸ் திரில்லர் அல்லது மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் கதை நகர்கிறது. இதுவே ஹாலிவுட் படம் பார்க்கிற மாதிரியான பீலிங்கை தருகிறது. துருவங்கள் 16 பட ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங் ஒரு சீனையும் செதுக்கி இருக்கிறார். கேரளாவில் படம் நடிப்பதும், ஒரு வித டோனை படம் முழுக்க கொண்டு வந்து இருப்பதும் பிரஷ். ஹர்ஷவர்தன் பின்னணி இசையம் பிளஸ்.

படத்தின் ஹீரோ வலு கதையும், விறுவிறு திரைக்கதைதான். அதற்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள் நடிகர்கள், சீரியல் கொலைகள் மாதிரி கதை சென்றாலும், கடைசியில் மெடிக்கல் திரில்லராக மாறுவது செம டிவிஸ்ட். அதிலும் கொலைக்கான காரணம், அந்த பின்னணியை கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அறிவியல்பூர்வமாக அந்த விஷயம் அனைவருக்கம் ஆச்சரியம் தருகிறத. . அதுவே படத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. அதிலும் மரணம் குறித்து சொல்லப்படும் விஷயங்கள். அந்த ஆராய்ச்சி ஒரு வித புதுமையான உணர்வை தருகிறது.

படம் கொஞ்சம் நீளம் மைனஸ். சில விசாரணை காட்சிகள் மெதுவாக நகர்கிறது. அந்த கிளைமாக்ஸ் ஆராய்ச்சியை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் என்பது போன்ற சில குறைகள் இருந்தாலும், மலையாள திரில்லர் படங்களுக்கே உரிய அந்த டோன், நல்ல படம் பார்த்த நிறைவை தருகிறது. ஹீரோயிசம், கமர்ஷியல் விஷயங்கள், ஓவர் பில்டப்பில் கவனம் செலுத்தாமல் கதையை புதுமையாக சொன்னதில் இயக்குனர் ஜெயித்து, படத்தையும் பேச வைக்கிறார். முதற்பாதியை விட, இரண்டாம்பாதியிில் விறுவிறுப்பு அதிகம். அதிலும் கிளைமாக்ஸ் சூப்பர்.

கொலைகள் நடக்கும் விதம், கொலையாளியை தேடுவது, அடுத்தடுத்த திருப்பங்கள், கொலைக்கான காரணம், கிளைமாக்ஸ், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அனோமியை, ஒரு மாறுபட்ட நல்ல படமாக்கி இருக்கிறது. திரில்லர் பிரியர்களுக்கு, வழக்கமான சினிமா பார்த்து போராடித்தவர்களுக்கு அனோமி நல்லதொரு சினிமா அனுபவம்

அனோமி - அற்புதமான திரில்லர் அனுபவம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

A Arul Swaminathan, Coimbatore
2026-03-07 16:07:36

வெள்ளிக்கிழமை வந்தாலே சின்னராச கையில் புடிக்க முடியாது என்பது போல, மலையாள வாட அடிச்சாவே உங்க விமர்சன குழு அந்த படம் எப்படி இருந்தாலும் பாராட்டுகளை அள்ளித்தெளிப்பதும் மார்க்குகளை வாரி வழங்குவதுமாக ஒரே ஆர்ப்பாட்டம்தான் போங்க. முடியல.