உள்ளூர் செய்திகள்

ஆழி

தயாரிப்பு : 888 புர டக் சன்ஸ், செல்லுலாய்டு கிரியேஷன்ஸ்
இயக்கம் : மாதவ் ராம்தாஸ்
நடிப்பு : சரத்குமார் , இந்திரஜித், தேவிகாசதீஷ், வையாபுரி, தாமரை
ஒளிப்பதிவு :ஆனந்த்
இசை : ஜாஸி கிப்ட்.
வெளியான தேதி : பிப்ரவரி 27, 2026
நேரம் : 1 மணிநேரம் 56 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

தனது மகள் தேவிகா சதீஷை உயிராக நினைக்கிறார் சரத்குமார். அவரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் புதுமுக ஹீரோ இந்திரஜித். பின்னே இருவருக்கும் பிரச்னை வராதா? ஒரு சூழ்நிலையில் நடு கடலில் மீன்பிடி படகில் இந்திரஜித் உயிரை எடுக்க சரத்குமாரும், அவர் உயிரை எடுக்க இந்திரஜித்தும் சண்டை போடுகிறார்கள். காதல் ஜெயித்ததா? பாசம் ஜெயித்ததா? யார் உயிர் போனது என்ற கோணத்தில் மலையாள இயக்குனர் மாதவ்ராம்தாஸ் இயக்கியுள்ள படம் ஆழி. இதற்கு கடல் என்று அர்த்தம். படத்தின் பெரும்பாலான சீன்கள் கடலில் நடப்பதால் இந்த தலைப்பு.

போதைப்பொருள் கடத்தல்காரர், படகு மெக்கானிக், கோபக்காரர் என சரத்குமார் கேரக்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ப அவரும் படம் முழுக்க உர்ரென இருக்கிறார். மகளிடம் மட்டும் பாசம் காண்பிப்பவர், மனைவியை அடிக்கிறார். கல்லுாரி மாணவன் இந்திரஜித் மகளை காதலிக்கிறார் என்பதை அறிந்து, அவரை கடத்தி சென்று படகில் வைத்து பொளக்கிறார். சரத்குமார் தோற்றத்தில் கொஞ்சம் மாற்றம், தாடி வைத்து பிட் ஆக இருக்கிறார். ஆனால், நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. அந்த கேரக்டர் சரத்குமாருக்கு செட் ஆகவும் இல்லை. அவர் கேரக்டர் பின்னணி பற்றி சரியான டீடெயிலும் இல்லை. சரத்குமாரின் தமிழ் இமேஜ், அவரின் குணம் தெரியாமல் ஒரு நெகட்டிவ் ரோலுக்கு பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மாதவ். அதையும் சரியாக காண்பிக்காமல் பொறுமையை சோதித்து இருக்கிறார்.

சரத்குமார் மகளாக வரும் தேவிகா சதீஷ் கியூட் ஆக இருக்கிறார். ஒரு பாடலில் அழகாக இருக்கிறார். காதல் சீன்களும் ஓகே ரகம். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார். கிளைமாக்சில் கூட வரவில்லை. அவரை காதலிப்பவராக வரும் இந்திரஜித் தோற்றம், நடிப்பில் கவனிக்க வைக்கிறார். ஆனால், முக்கியமான இடங்களில் நடிப்பை வெளிப்படுத்தாமல் ஒரே மாதிரி முகபாவனைகளை வெளிப்படுத்தி சோதிக்க வைக்கிறார். அவர் அப்பாவாக வையாபுரி, அம்மாவாக பிக்பாஸ் தாமரை ஒன்றிரண்டு சீன்களில் வந்து செல்கிறார்கள்.

படத்தின் பெரும்பகுதி கதை ஒரு மீன்பிடி படகில் நடக்கிறது. இந்திரஜித்தை சரத்குமார் தாக்க, அவர் தப்பித்து ஓட, பின்னர் அவர் சரத்குமாரை தாக்க, மீட்க என கதை பயணிக்கிறது. அந்த சீன்கள் சில பரவாயில்லை. பல சீன்கள் போராடிக்கிறது. இரண்டு கேரக்டர்கள், ஒரு சின்ன மீன் படகில் சிக்க சண்டை போடுகிற கதையில் ஈர்ப்பு, பரபரப்பு இல்லை. இவர்களுக்கு இடையில் லக்கி என்ற நாய் வேறு. அதற்கும், சரத்குமாருமான பாச சீன் ஓகே. ஆனால், அதுவும் ஒரு கட்டத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது. சண்டை, தாக்குதல், ரத்தம், அடி, வலி என சீன்கள் நகர்வது போராடிக்கிறது. எப்ப படத்தை முடிப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சரி, கிளைமாக்சிலாவது ஏதோ ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தால், மலையாள படங்களை போல இரண்டுபேருக்கும் சோக முடிவை வைத்து ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர்.

ஆழியில் ஒளிப்பதிவாளர் ஆனந்த் உழைப்பை பாராட்டலாம். அந்த சின்ன படகில் அவர் வைத்திருக்கும் கோணங்கள், சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. அந்த போட் சீன் ஆங்கிள்களும் பிரமாதம். லஜ்ஜாவதியே என்ற ஹிட் பாடல் கொடுத்த ஜாசி கிப்ட் இதில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நான் எந்த அளவுக்கு உங்க மகளை காதலிக்கிறேன் என்று ரத்தத்தில் ஹீரோ ஒரு விஷயம் செய்வார் ஹீரோ. பதிலுக்கு சரத்குமார் ஒரு விஷயத்தை காண்பிப்பார். படத்தில் உருப்படியான சீன் அதுதான். மற்றபடி, இந்த கதையில் சரத்குமார் ஏன் நடித்தார். அவருக்கும், கேரக்டருக்கு செட் ஆகலையே என்றுதான் கேட்க தோன்றுகிறது. மலையாள ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட எக்ஸ்பரிமண்டல் கதை பிடிக்கலாம். தமிழில் , அதுவும் சரத்குமாரை வைத்து எடுத்தது விஷப்பரீட்சை .

ஆழி - 'நடுக்கடலில் தத்தளிக்கிறோமே' என்று தவிக்கிறது ரசிகர்களின் மனசு



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !