மை லார்ட்
தயாரிப்பு : ஒலிம்பியா பிக்சர்ஸ்
இயக்கம் : ராஜூ முருகன்
நடிப்பு : சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
இசை : ஷான் ரோல்டன்
வெளியான தேதி : பிப்ரவரி 13, 2026
நேரம் : 2 மணிநேரம் 28 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
கோவில்பட்டி தீபெட்டி கம்பெனியில் வேலை செய்யும் மனைவி சைத்ராவுக்கு வயிறு வலி ஏற்பட, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் சசிகுமார். அங்கே சரியான ட்ரீட்மென்ட் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையை நாடுகிறார். அங்கே ஏற்படும் செலவுகளுக்காக வட்டிக்கு பணம் வாங்குகிறார். அதை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்க, 'நீயும், உன் மனைவியும் கிட்னியை விற்று கடனை அடையுங்க' என்று பணம் கொடுத்தவர் மிரட்டுகிறார். அதற்கு பயந்து ஊரை விட்டு ஓட, பட்டாசு தீவிபத்தில் இவர்கள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து பணம் பெறுகிறார் வட்டி கொடுத்தவர். 'நாங்க இறக்கவில்லை' என்று மீண்டும் ஊருக்கு வந்து போராடுகிறார்கள் சசிகுமாரும், சைத்ராவும். இதற்கிடையில் மத்திய அமைச்சர் ஆஷா சரத் பிரதிநிதி இவர்களை அணுகி '' மேடத்துக்கு கிட்னி கொடுத்தால் பணம் தருகிறோம், உங்க பிரச்னையை சரி செய்கிறோம்'' என டீல் பேசுகிறார். அதை நம்பி சென்னைக்கு புறப்படும் சசிகுமார், சைத்ராவுக்கு என்ன நடக்கிறது? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லும் கதை. மை லார்ட் என்ற தலைப்பு காரணமாக கோர்ட் சம்பந்தப்பட்ட கதை என நினைக்க வேண்டாம். கோர்ட் சீனும் இருக்கிறது. அதைவிட அரசியல், அதிகாரங்களால் எளிய மனிதர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது கிண்டல் பாணியில், மனித நேயத்தை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்.
கிட்னி திருட்டு, சட்ட விரோத கிட்னி விற்பனைதான் படத்தின் மையக்கரு. அதில் பணத்துக்காக, குடும்ப சூழ்நிலைக்காக 'அப்பாவிகள்' எப்படி சிக்குகிறார்கள். அவர்களை எப்படி ஒரு கூட்டம் ஏமாற்றுகிறது என்பதை மையமாக சொல்லும் கதை. நம் அடிக்கடி செய்திகளில் படிக்கும் சம்பவங்கள்தான் என்றாலும், அதை கொஞ்சம் கமர்ஷியல், நக்கல், அரசியல் சட்டயர் கலந்து கொடுத்திருப்பதால் மை லார்ட் நிறையவே யோசிக்க வைக்கிறது, கேள்வி கேட்கிறது. ''நான் சாகவில்லை, உயிரோடு இருக்கிறேன்'' என்று சசிகுமார் ஆட்டம்போட்டு அதிகாரிகளை அலற வைக்கும் சீனில் இருந்து படம் தொடங்குகிறது. அதிலிருந்தே ராஜூ முருகனின் சேட்டைகள் தொடங்கிவிடுகிறது.
முத்து சிற்பி என்ற அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் சசிகுமார் என சொல்லலாம். சைத்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கி, அவரை திருமணம் செய்வது, மனைவி மருத்துவ செலவுகளுக்கு தவிப்பது, கடன் வாங்கி அவமானப்படுவது, பின்னர், கிட்னியை விற்க சென்னை புறப்படுவது, மத்திய அமைச்சர் பிரதிநிதியை அலறவிடுவது என பல சீன்களில் பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்சில் வள்ளலார் தத்துவத்தை விளக்கி அவர் பேசும் வசனமும், அடுத்து செய்யும் அதிரடி செயலும் கண்களில் தண்ணீரை வரவழைக்கிறது. அரசியல், அதிகாரத்தால் பாதிக்கப்படும் ஒரு சாதாரண கிராமத்து மனிதராக மனதிற்குள் நிற்கிறார். அவர் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம்.
யாருப்பா இந்த பொண்ணு என்று கேட்கும் அளவுக்கு கோவில்பட்டி சுசீலாவாக மாறி, நடிப்பில் மிரட்டியிருக்கிறார் கன்னட நடிகை சைத்ரா. அவரின் உடல் மொழி, உடை, மேக்கப் எல்லாமே கச்சிதம். முதற்பாதியில் மிரட்டியவர், இரண்டாம்பாதியில் அமைதியானது, படத்தின் மைனஸ்.
லோக்கல் நிருபராக வரும் குரு.சோமசுந்தரம் நடிப்பு, அந்த தெனாவெட்டு பேச்சு ஸ்டைல் செம. வக்கீலாக வரும் கோபிநயினாரின் கேரக்டர், நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ் வசனங்கள் இதெல்லாம் ரொம்பவே ஈர்ப்பு. பெரும்பாலும் படுக்கையில் இருந்தாலும் மத்திய அமைச்சராக வரும் ஆஷா சரத் நடிப்பும், அந்த கண்களும் படத்துக்கு பலம். அவர் கேரக்டர் யாரோ ஒரு மத்திய அமைச்சர் பாதிப்பாக இருக்கிறது. கதையில் அரசை, அரசியல்வாதிகளை ஆங்காங்கே கிண்டல் அடிக்கும் காட்சிகள் உள்ளது. ஆனாலும், தயாரிப்பாளர் ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் மாநில அரசை அதிக சீண்டாமல் சீன் வைத்து இருக்கிறார் இயக்குனர். தனது கைக்கு அதிகாரம் வந்தவுடன் சிறைக்கு சென்று சசிகுமார் நடத்தும் சம்பவங்கள் அருமை.
இவர்களை தவிர, புரோக்கராக வரும் அருள் ஏழிலன், வட்டிக்குவிடும் வசுமித்ரா, வள்ளலார் மையம் நடத்தும் அந்த பெண்மணி, ராஜூ முருகனுடன் இருக்கும் தாத்தா, மத்திய அமைச்சர் பிரதிநிதி, மத்திய அமைச்சர் வாரிசுகள், பிரபல மருத்துவமனை டாக்டர் என பல கேரக்டர்கள் கதையுடன் ஒட்டியிருக்கிறது. இப்படி மாறுபட்ட, ஏகப்பட்ட கேரக்டர்கள், அவர்களின் பின்னணி, நடிப்பு படத்தை ஆர்வமாக பார்க்க வைக்கிறது.
ராஜாதி ராஜாதி தொடங்கி பாடல்களில், பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் ஷான் ரோல்டன். வருங்காலத்தில் அவர் பாடுவதை குறைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். கோவில்பட்டி பின்னணியை அழகாக காண்பிக்கிறது நீரவ்ஷா கேமரா.
முதற்பாதியில் வேகமாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் தொய்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் ஆஸ்பத்திரி, கிட்னி, மத்திய மந்திரி என்று சுற்றி, சுற்றி வந்து போராடிக்கிறது. சில சீன்களின் நீளம், டயலாக் அலுப்பை தருகிறது. சில விஷயங்களை உன்னிப்பாக கவனித்தால்தான் இயக்குனர் சொல்கிற அரசியல் புரிகிறது. மத்திய மந்திரி பின்னணி, அவர் வீட்டில் நடக்கும் விஷயங்கள், அவரை சுற்றி நடப்பவை, சென்னை மருத்துவமனை காட்சிகளில் நாடகத்தனம் அதிகம். ஒரு இயல்பான கதையில், வலுவான விஷயங்கள் அல்லது உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள மிஸ்சிங். அதையும் காமெடியாக கடத்தியிருப்பது திரைக்கதையை வீக் ஆக்கி இருக்கிறது. கோர்ட் சீன் கொஞ்சம் பிரஷ் ஆக இருந்தாலும், இரண்டாம்பாதியில் வரும் மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகளில் படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னமும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும். கோவில்பட்டியில் இருந்த அழுத்தம், வீரியம், நக்கல், சென்னைக்கு வந்தபின் காணாமல் போய்விடுவது ஏனோ?
இப்படி பல குறைகள் இருந்தாலும் வள்ளலார் தத்துவத்தை, இன்றைய காலகட்டத்தில் அவர் கருத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை ஆங்காங்கே இயக்குனர் சொல்வதும், கிளைமாக்சில் அதை முக்கியமான கருவாக கொண்டு வந்து இருப்பதும் மை லார்ட்டை மனதிற்குள் நெருக்கமான படமாக்கி இருக்கிறது
மை லார்ட் - ஓபனிங், கிளைமாக்ஸ் நல்லா இருக்கு, இடையில் கொஞ்சம் சொதப்பிட்டீங்க மை லார்ட்