உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ரெட் லேபில்

ரெட் லேபில்

தயாரிப்பு : ரேவ்கன் பிலிம் பேக்டரி
இயக்கம் : கே.ஆர்.வினோத்
நடிப்பு : லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார்
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
இசை : கைலாஷ் மேனன்
வெளியான தேதி : பிப்ரவரி 6, 2026
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. வழக்கம்போல் அந்த ஏரியா எம்.எல்.ஏ மகன் அட்ராசிட்டி செய்து, அந்த தேர்தலில் ஜெயிக்க ஆசைப்படுகிறான். இன்னொரு நல்ல மாணவன் அந்த பதவிக்கு வரணும் என்று மற்ற மாணவர்கள், கல்லுாரி ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். எம்.எல்.ஏ மகனின் ரவுடிதனம் அதிகமாக, அதே கல்லுாரியில் படித்து மாணவர் தேர்தலில் ஜெயித்த, முன்னாள் மாணவன் ஹீரோ லெனின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். அவரும் கல்லுாரிக்கு வந்து நேர்மையானவர்களுக்கு சப்போர்ட் செய்கிறார். அவரை, எம்எல்ஏ மகள் அஸ்மின் காதலிக்கிறார். வீட்டில் எதிர்ப்பு. அப்போது கல்லுாரி வளாகத்தில் அஸ்மினை மணக்க இருந்த முறைமாமனான ரவுடி கொலை செய்யப்பட, போலீஸ் துப்பறிகிறது. அந்த கொலையை செய்தது யார்? போலீஸ் அவர்களை கண்டுபிடித்தார்களா என்பதுதான் ரெட் லேபில் கதை.

மாணவர் தேர்தல், காதல், அரசியல் தலையீடு, கொலை, துப்பறிவு விசாரணை, திருப்பம் என பல விஷயங்களை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். மாணவர் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள், அடாவடி மாணவர்களின் இம்சை, நேர்மையான எதிரணி பாதிக்கப்படுவது, வில்லன் அணிக்கு போலீஸ், அரசியல்வாதிகள், ரவுடி உதவுவது பின்னர், நல்ல அணி வெல்வது இதெல்லாம் எத்தனையோ படங்களில் பார்த்து புளித்தது. இந்த படத்திலும் அதுவே. அதிலும் கல்லுாரி பேராசிரியை ஒருவரை எம்எல்ஏ மகன் டார்ச்சர் செய்வது ஓவர். அதேசமயம் அந்த பெண் பேராசிரியை நடிப்பு, அவர் கொலையை மறக்க உதவுவது சிறப்பு

வில்லன் அணிக்கு எதிராக, ஹீரோ அஸ்மின் என்ட்ரி ஆவதில் இருந்து கதை ஓரளவு சூடுபிடிக்கிறது. அதில் அவர் காலத்தில் நடந்த தேர்தல், பிரச்னைகள், அவரின் காதல் வருகிறது. அதிலும் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. ஓரளவு நடித்து இருக்கிறார் லெனின். ஹீரோயினாக வருகிற அஸ்மின் சில காட்சிகளில் கவர்கிறார். அவரின் காதலுக்கு வீட்டில் பிரச்னை, திடீர் நிச்சயதார்த்தம், தோழிகள் உதவியுடன் அவர் தப்பிக்க நினைப்பது என அவர் போர்ஷனிலும் பல படங்களின் சாயல். கிளைமாக்ஸ் டுவிஸ்ட், அதில் ஹீரோயின் பேசும் வசனங்கள், எடுக்கும் முடிவு மட்டும் புத்திசாலிதனம்.

எம்எல்ஏவாக வரும் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு பிளஸ். அவருக்கும், அவர் பிஏ அனுமோகனுக்குமான சீன்கள் நன்றாக இருக்கிறது. இனி, அவரை அதிக படங்களில் வில்லனாக பார்க்கலாம். என்ன அவர் கொஞ்சம் நாடகத்தனத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முனிஸ்காந்த் ஒரு சீனில் வந்து போகிறார். மற்றபடி, கொலையாளி யார் என கண்டுபிடிக்க வரும் தடயவியல் பெண் அதிகாரி, கல்லுாரியில் இருக்கும் கிரிமினாலாஜி பேராசியர், அவர்கள் செய்யும் சில சம்பவங்கள். மாணவர்கள் சிலரும் மனதில் நிற்கிறார்கள்

வழக்கமான கல்லுாரி தேர்தல், காதல் மோதல் என செல்லும் படம், கல்லுாரி வளாகத்தில் ஒரு கொலை நடப்பதில் இருந்து விறுவிறுப்பு களமாக மாறுகிறது. அந்த பிணத்தை வைத்துக் கொண்டு மாணவர்கள் படும் பாடு, புத்திசாலி தனமாக கொலை மறைக்க முயற்சிப்பது, அப்போது நடக்கும் விஷயங்கள் திரைக்கதையில் நல்ல இடங்கள். கிளைமாக்சும் ஓகே. போலீஸ், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சீனிலும் புதுமை இல்லை. புதுமுகங்கள் அதிகம் நடித்தது, புதுமையான காட்சிகள் இல்லாதது படத்துக்கு மைனஸ். படம் பார்க்கும் பலருக்கும் இந்த கதைக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது நிச்சயம்.

ரெட் லேபில் - எத்தனையோ படங்களில் பார்த்த காட்சிகளை தொகுத்து, புது லேபிள் ஒட்டி கொடுத்த படம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !