உள்ளூர் செய்திகள்

வித்லவ்

தயாரிப்பு : ஜீயோன் பிலிம்ஸ், எம்.ஆர்.பி. என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம் : மதன்
நடிப்பு : அபிஷன் ஜீவிந்த், அனஸ்வராராஜன், சச்சின், காவ்யா
ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இசை : ஷான்ரோல்டன்
வெளியான தேதி : பிப்ரவரி 6, 2026
நேரம் : 2 மணிநேரம் 21 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

சென்னையில் வசிக்கும் ஹீரோ அபிஷன் ஜீவிந்த் தனது அக்கா வற்புறுத்தலால் ஹீரோயின் அனஸ்வரா ராஜனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கிறார். திருமணம் குறித்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இருவருமே திருச்சியில் ஒரே பள்ளியில் படித்த ஸ்டூடண்ட்ஸ் என்பதை அறிகிறார்கள். தங்களின் பள்ளி பருவ நினைவுகள், முதல் காதல் குறித்த மலரும் நினைவுகளில் முழ்கிறார்கள். நாம் காதலித்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை நேரில் போய் பார்க்கலாமே என்ற புதுமையான முடிவெடுத்து, இருவரும் திருச்சிக்கு கிளம்புகிறார்கள். அபிஷன் ஜீவிந்த் தனது காதலி காவ்யாவை சந்தித்து பேசினாரா? தான் காதலித்த சச்சினை பார்த்தாரா அனஸ்வரா? அந்த காதலர்களின் வாழ்க்கை, மனநிலை எப்படி இருக்கிறது யாருக்கு, யாருடன் திருமணம் நடந்தது? இதுதான் வித்லவ் படக்கதை. புதுமுகம் மதன் இயக்கி இருக்கிறார்.

டூரிஸ்ட் பேமிலி என்ற வெற்றி படம் கொடுத்த அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களின் அறிமுகம், பேச்சு, பயணம், சண்டை, காதல் இதுதான் படத்தின் கரு. பெரும்பாலம் இளைஞர்கள் உருவாக்கி, இளைஞர்கள் நடித்த படம் என்பதால் படம் முழுக்க இளமை பொங்கி வழிகிறது. அவர்களின் காதல், வாழ்க்கை, குடும்பம் குறித்த பார்வை. அவர்களின் பேச்சு மொழி, எண்ண ஓட்டங்கள் எல்லாமே சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் அல்லது பாரம்பரியத்தில் ஊறியவர்கள் இதனுடன் கனக்ட் ஆவது கஷ்டம்.

ஹீரோவாக அறிமுகமாகி உள்ள அபிஷன் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞராக ஸ்கோர் செய்து இருக்கிறார். தனது வருங்கால மனைவி அனஸ்வராவை சந்திப்பது, பேசுவது, தனது பள்ளி காதலை பகிர்வது, அவர் வற்புறுத்ததால் திருச்சி சென்று, தனது காதலியை சந்திப்பது, பின்னர் அனஸ்வரா காதலனை சந்திப்பது என பல இடங்களில் நிறைவான நடிப்பை தந்து இருக்கிறார். குறிப்பாக, அவரின் திருச்சி ஸ்கூல் போர்ஷன் கியூட். மாணவன் கெட் அப்புக்கும் பக்காவாக பொருந்தி இருக்கிறார். ஸ்கூலில் காதலை சொல்ல முயற்சிக்கிற இடங்கள், மீண்டும் பல ஆண்டுகளுக்குபின் அந்த காதலியை பார்த்து பேசுவது, கடைசியில் தனது காதல் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் அடிக்கடி லுாட்டி ஆகியவை செம. ஹீரோயிசம் இல்லாத, செயற்கை தன நடிப்பு இல்லாத அவரின் கேரக்டரில் பலரை இம்ரஸ் செய்யும். தமிழுக்கு ஒரு ஹீரோ கிடைத்து இருக்கிறார்.

என்ன சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். அதை குறைத்து இருக்கலாம். சில இடங்களில் பிரதீப்ரங்கநாதன் சாயல் வருவதையும் தவிர்த்து இருக்கலாம். ஆக் ஷன், வெட்டு, குத்துனு போய் சினிமாவை கெடுக்காமல் இருக்கணும். அவரின் நண்பர்களாக வருபவர்களும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள், நம் ஸ்கூல்டேஸ் நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள்.

படத்தின் பெரிய பிளஸ் மோனிஷாவாக வரும் அனஸ்வாரா நடிப்பு, அழகான பாடிலாங்குவேஜ், அவரின் அதிரடி முடிவுகளும், பேச்சுதான். காபி ஷாப்பில் ஆரம்பித்து, திருச்சி, சென்னை என அனைத்து இடங்களில் இன்றைய மார்டன் பெண்ணாக கலக்கியிருக்கிறார். அவரின் ஸ்கூல் போர்ஷன், காதல் போர்ஷனும் மனதில் நிற்கிறது. அவரின் கோபம் இன்னும் அழகு. ஹீரோவுடன் அவர் கெமிஸ்ட்ரி பக்காவாக செட்டாகி இருக்கிறது. என்ன, பேச்சில் மலையாள வாடை அதிகமாக இருக்கிறது. சொந்தக்குரலில் பேசியிருக்காமல் வேறு யாரையாவது வைத்து டப்பிங் பேசியிருந்தால் அந்த கேரக்டர் இன்னும் மனதில் நின்று இருக்கும். படம் பார்க்கும் இளைஞர்கள் அனஸ்வராவை கொண்டாடுவார்கள்.

யாருடா இந்த பொண்ணு என கேட்க வைக்கிறார் அபிஷன் காதலியாக வரும் காவ்யா. ஸ்கூல் போர்ஷனில் அதிகம் பேசாமல் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் இன்னொரு பரிமாணத்தில் வந்து எல்லாரையும் கைதட்ட வைக்கிறார். அதேபோல், ஹீரோயின் காதலனாக வரும் சச்சின் நாச்சியப்பனும் திருச்சி லைப், கிளைமாக்சில் சில நிமிடம் பேச வைக்கிறார். இவர்கள் நான்குபேரை சுற்றியே கதை நகர்ந்தாலும், திருச்சி வாத்தியாராக வரும் சரவணன், அவரின் கேரக்டர், அவர் மூலம் சொல்ல வருகிறது விஷயம் டச்சிங். ஹீரோ அக்காவாக வரும் ஆர்.ஜே.ஆனந்தி, அப்பா முருகேசனும் கொஞ்சம் நேரம் வந்தாலும் நிறைவான கேரக்டர்கள்

சென்னை போர்ஷன் ஒருவித அழகு என்றால், திருச்சியில் நடக்கும் பிளாஷ்பேக் ஸ்கூல் போர்ஷன் இன்னும் அழகு. அதை பார்ப்பவர்களுக்கு தங்களின் ஸ்கூல், ப்ரண்ட், டீச்சர், முதல் காதல், அதற்காக நடந்த சண்டை, தயங்கம், அவமானம் என பல விஷயங்கள் வந்து போவது உறுதி. கிளைமாக்சும் எக்ஸ்பரிமெண்டலாக இல்லாமல், சோகமாக இல்லாமல், கலகலவென நிறைவாக முடிந்து இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவு திருச்சியை, அந்த பள்ளி காட்சிகளை அழகாக காண்பிக்கிறது. அதேபோல் சின்ன, சின்ன வசனங்கள், பாசிட்டிவ் சீன் நம்மை விசில் அடிக்க வைக்கிறது.

ஆனாலும் திரைக்கதையில் டிவிஸ்ட், விறுவிறுப்பு குறைவு. இதுதான் நடக்கப்போகிறது என்ற எண்ணம் வருவதும், அது அப்படியே நடப்பதும் வீக்னஸ். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் உட்பட பல படங்கள் நினைவில் வந்து செல்கின்றன. இரண்டாம்பாதியில் இருக்கும் ஸ்பீடு, முதற்பாதியில் மிஸ்சிங். படம் முழுக்க ஏதாவது ஒரு கேரக்டர், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பதும் சிலசமயம் போரிங். காதல் கதை என்றாலும் அழுத்தமாக சொல்லாமல், காமெடியாக கடத்திக்கொண்டு போய் இருப்பதும் வித்லைவ்வை சராசரி படமாக்கி விடுகிறது.

இப்படிப்பட்ட கதைகளுக்கு இசை முக்கியம். ஷான்ரோல்டன் பின்னணியில் இசையில் புகுந்து விளையாடி இருக்கிறார். ஆனால், பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி, கமர்ஷியலாக கொடுத்து இருந்தால் படம் சூப்பர் ஹிட்டாகி இருக்கும். ஒரு முக்கியமான இடத்தில் வரும் அவள் வருவாளா பாடலும், அந்த சீன்களும் கலர்புல்.

இளைஞர்கள் எடுத்த, இளைஞர்களின் காதல் மனநிலையை சொல்லும் கதை என்பதால் மற்றவர்கள் கொஞ்சம் விமர்சனம் செய்யலாம். சில குறைகளை சொல்லலாம். ஹீரோயின் கேரக்டர் மீது கேள்விகள் வரலாம். ஆனாலும், யூத் கொண்டாடுவார்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர்கள், காதலித்தவர்கள் கொண்டாட வந்திருக்கும் கலகல காதல் படம் இது. டூரிஸ்ட் பேமிலி, டியூட், டிராகன் அளவுக்கு இல்லை. ஆனாலும், ஒகே ரகம்

வித்லவ் - காதலை விரும்புவர்களுக்கு இந்த லவ் ரொம்ப பிடிக்கும்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !