உள்ளூர் செய்திகள்

பூக்கி

தயாரிப்பு : விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன்
இயக்கம் : கணேஷ் சந்திரா
நடிப்பு : அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்
ஒளிப்பதிவு : கணேஷ்
இசை : விஜய் ஆண்டனி
வெளியான தேதி : பிப்ரவரி 13, 2026
நேரம் : 2 மணிநேரம் 12 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

ஹீரோ அஜய் தீஷன் ஈகோ பிரச்னை, கருத்து வேறுபாடு காரணமாக லல்வர் தனுஷாவை பிரிக்கிறார். காதலை மறக்க ஆன்மிக பாதைக்கு திரும்புகிறார் தனுஷா. ஜிம், நண்பர்கள் என மாறுகிறார் அஜய். இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது. ஆனாலும், இருவருமே முந்தைய காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். கடைசியில் என்ன முடிவெடுத்தார்கள். எந்த காதலை ஓகே செய்தார்கள். இதுதான் பூக்கி கதைக்கரு.

இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலை, வாழ்க்கையை பார்க்கும் விதம், செய்யும் தவறுகள், முடிவெடுக்கும் விதம் என பல விஷயங்கள் பின்னணியில் பூக்கியை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா. இவர் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர், பூக்கியை ஒளிப்பதிவு செய்து, முதன்முறையாக இயக்குனர் ஆகியிருக்கிறார். அக்கா மகனான, மருமகன் அஜய் தீஷனுக்காக படம் தயாரித்து, இசையமைத்து, எடிட் செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

ஹீரோவை மனதில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், படத்தின் கதை, முக்கியமான சீன்களும் அஜயை சுற்றியே நடக்கிறது. அவரும் துறுதுறு இளைஞனாக, காதலிகளிடம் சிக்கி தவித்து, முடிவெடுக்க முடியாமல் திணறுபவராக, காதல் வலியால் அவதிப்படுவராக நன்றாகவே நடித்து இருக்கிறார். அஜயின் துறுதுறு நடிப்பு, இயல்பான வசனங்கள், ஸ்டைலான டான்ஸ், யூத் ஆடியன்சை கவரும். குறிப்பாக, காதலிகளுடன் சண்டை போடுகிற சீன்களில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஜிம்மில் அவர் அடிக்கிற லுாட்டி, பெங்களூரில் இன்னொரு காதலியுடன் சுற்றும் சீன்கள், மேட்ரிமோனியலில் பெண் பார்க்கும் விதம் ரசிக்க வைக்கிறது. முதற்பாதியில் நாய், பூனை பேசுபது சுவாரஸ்யம், சுனில், அந்த ஆன்மிகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறு. ஜிம்மில் பிரியங்கா வரும் இடங்களும் ஓகே. சிம்புவை வேறுமாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள். அது ஒட்டவில்லை.

ஹீரோயினாக நடித்து தனுஷா உண்மையில் கதைக்கு அவ்வளவு பலம். அவரின் தோற்றம் மட்டுமல்ல, நடிப்பு, கோபம் எல்லாமே அழகு. காதலனை சண்டை போட்டு பிரிகிற சீனில், கார்ப்பரேட் சாமியாரை கேள்வி கேட்கிற சீனில், இன்னொரு காதலில் விழுகிற சீனில், கிளைமாக்சில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகாக இருக்கிறார். பெங்களூர் பெண்ணாக வரும் ஷியாரா சம்பந்தப்பட்ட காதல் சீன்களிலும் விறுவிறுப்பு.

கார்ப்பரேட் சாமியாக நடித்த சுனில் சம்பந்தப்பட்ட காட்சிகள், அவரின் நடிப்பு சூப்பர். ஹீரோ பெற்றோர்களாக வரும் பாண்டியராஜன் தம்பதியினர், ஹீரோயின் பெற்றோர்களாக வரும் ஸ்ரீராம், ராதா சீன்களை இன்னும் அதிகரித்து இருக்கலாம். உணர்ச்சிபூர்வமாக காண்பித்து இருக்கலாம். அதேபோல், ஹீரோயின் பாட்டியாக வருபவர் ஏதோ செய்யப்போகிறார், அவரால் ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று நினைத்தால் எதுவும் நடக்கவில்லை. இன்னும் எத்தனை படங்களில்தான் காதலை ஜாதி பிரிக்கிறது என காண்பிப்பார்களோ?

படம் முழுக்க அஜய் தீஷன், தனுஷா சம்பந்தப்பட்ட சீன்களில் அதிகம் ஆக்கிரமித்து இருப்பதும், ஏதாவது ஒரு கேரக்டர் தத்துவம், வாழ்க்கை, எதிர்காலம், பெண்கள், காதல், திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருப்பதும் போராடிக்கிறது. கதாசிரியர், வசனகர்த்தா புதியபரிதி தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் ஒரே படத்தில் சொல்ல நினைத்து இருக்கிறார். அது அலுப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகளை விட, பாடல்கள், பீலிங்கை விட வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அது படத்துக்கு மைனஸ். அதேபோல் கிளைமாக்ஸ் இப்படிதான் இருக்கப் போகிறது என்ற டோன் முன்பே தெரிந்துவிடுவதும் ஏமாற்றம்.

மருமகனை வைத்து படம் தயாரித்த விஜய் ஆண்டனி, தானே படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஏதாவது ஸ்பெஷல் இருக்கும் என எதிா்பார்த்தால் ஏகப்பட்ட ஏமாற்றம். அவரே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். அது இன்னும் ஏமாற்றம். படத்தின் எடிட்டரும் அவரே. மற்றவர்கள் யாராவது செய்திருந்தால் படத்தை இன்னும் ஷார்ப் ஆகி இருப்பார்கள். அதிலும் சொதப்பி இருக்கிறார். உங்களுக்கு ஏனிந்த வேலை என்று அவரிடம் கேட்க தோன்றுகிறது. எந்த வேலையையும் சரியாக செய்யாமல் படத்தின் பின்னடவைக்கு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. மருமகனை 'இப்படியா' வளர்த்துவிடுவது சாரே?

காதல், காதலர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவர்கள் பேசும் சில விஷங்கள் புதுசாக இருக்கிறது. அட, நாம பின்தங்கி இருக்கிறோம். பெண்களில் இத்தனை வகையா? இன்றைய இளைஞர்கள் மனசு இப்படி மாறிவிட்டதா என்று மற்றவர்களுக்கு ஆச்சரியம் வரலாம். காதலர் தினத்தை முன்னிட்டு படம் பார்க்கும் காதலர்கள் மட்டும் படத்தை ரசிக்கலாம். தங்களுக்கும் மனசு மாறலாம். மற்றவர்களுக்கு பூக்கியில் புதுசு இல்லையே? நேரத்தை வீணடித்துவிட்டோமே என்ற எண்ணம் ஏற்படும்.

பூக்கி - தலைப்பில் இருக்கும் புதுமை, கதையில் இல்லீங்க



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !