மைலாஞ்சி
தயாரிப்பு : டாக்டர் அர்ஜூனன்
இயக்கம் : அஜயன்பாலா
நடிப்பு : ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப், சிங்கம்புலி, முனிஸ்காந்த்
ஒளிப்பதிவு : செழியன்
இசை : இளையராஜா
வெளியான தேதி : பிப்ரவரி 13, 2026
நேரம் : 1 மணிநேரம் 58 நிமிடம்
ரேட்டிங் : 2/5
சித்தி கொடுமையால் தவிக்கும் ஹீரோயின் கிரிஷா குரூப், அந்த ஏரியா சிறுவன் கொடுக்கும் ஐடியாபடி ஊட்டிக்கு வரும் ஒரு அழகான இளைஞனை காதலிக்கிறார். அவரை திருமணம் செய்து சென்னையில் செட்டில் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். காதலை சொல்லும்முன்பு அந்த இளைஞன் சென்னைக்கு சென்றுவிடுகிறார். இதற்கிடையில், ஊட்டிக்கு பறவைகளை போட்டோ எடுக்க வரும் ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப்பை காதலிக்க, அவரோ 'சென்னை இளைஞன் காதலை சொல்லி, அவருடன் சேர்த்து வைக்கும்படி வேண்டுகிறார்'. காதலிக்கும் பெண்ணுக்காக காதலை தியாகம் செய்ய நினைக்கிறார் ஹீரோ. இதற்கிடையில், தனது குடிகார தம்பிக்கு ஹீரோயினை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் சித்தி. அந்த நேரத்தில் சென்னை இளைஞன் ஊட்டிக்கு வர, ஸ்ரீராம்கார்த்திக் ஒரு விபத்தில் சிக்க, கிரிஷா குரூப் யாரை கரம்பிடித்தார் என்பது அஜயன்பாலா இயக்கிய மைலாஞ்சி கதை. ஊட்டியில் உள்ள ஒரு இடத்தின் பெயர் மைலாஞ்சி.
பாலுமகேந்திரா படம் மாதிரி மைலாஞ்சி தொடங்குகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியான பேக்கிரவுண்ட், சைக்களில் வரும் ஹீரோயின், கேமராவுடன் சுற்றும் ஹீரோ, காதல் என்று ஆரம்பம் அமர்களமாக இருக்கிறது. அப்பாவிதனம் கலந்த கேரக்டரில், அந்த ஏரியா சின்ன பையன் சொன்னதை கேட்டு காதலிக்கும் கேரக்டரில், ஹீரோவை சுற்றி, சுற்றி வரும் இடங்களில் கிரிஷா குரூப் நன்றாகதான் இருக்கிறார். ஆனால், எதிர்பார்த்த இடங்களில் நடிப்பை மிஸ் பண்ணுகிறார். சின்ன பெண்ணுமாக இல்லாமல், பெரிய பெண்ணுமாக இல்லாமல் இடைப்பட்ட வயதில் கதைக்கு செட்டாகாமல் தெரிகிறது. பார்த்தவுடன் காதல், மெயில் பற்றி தெரியாத வெகுளிதனம், சின்ன பையன் பேச்சை கேட்பது இதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
லாபிங் டிராஷ் என்ற பறவைவை போட்டோ எடுக்க வேண்டும் என்று சுற்றி திரிகிற கேரக்டர் ஹீரோ ஸ்ரீராம்கார்த்திற்கு. அதிலும் டீடெயில், ஈர்ப்பு இல்லை. அவருக்கு வழிகாட்டுகிறேன் என்று சிங்கம்புலி கூப்பிட்டு பேசுகிற இடங்கள் போர். காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து இம்சை கொடுத்து இருக்கிறது அந்த புலி. முனிஸ்காந்த் ஒன்றிரண்டு இடங்களில் வந்து போகிறார். இன்னொரு ஹீரோவாக வருபவர் பார்க்க அழகாக இருக்கிறார். ஸ்டைலாக நடிக்கிறார். ஆனால், அவருக்கான காட்சிகள் மிகக்குறைவு. கடைசியில் பெரும்பாலான தமிழ்சினிமா ஹீரோக்களை போல தியாகம் செய்கிறார். ஹீரோயின் சித்தி தக் ஷா, அவர் தம்பி என பெரும்பாலான கேரக்டர் மனதில் நிற்கவில்லை.
கதையும் பரபரப்பு இல்லாமல், மெதுவாக நகர்கிறது. காதல், சைக்களில், ஊட்டி, ரயில், அதே இடம் ஆகியவை மாறி, மாறி வருகின்றன. படத்தின் ஒரு ஆறுதல் செழியனின் ஒளிப்பதிவுதான். சின்ன, சின்ன காட்சிகளில் கூட தனது அழகியல் டச் கொடுத்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் கேட்கவே வேணாம். ஊட்டியை இப்படி குளிர்ச்சியாக பார்த்து பல ஆண்டுகள் ஆச்சு. அவரின் ஒளிப்பதிவு அழகிய கவிதை மாதிரி இருக்கிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை இன்னும் சுமார். உண்மையிலே அவர்தான் இசைத்தாரா என்ற சந்தேகம் வருகிறது.
கிளைமாக்சுக்கு முந்தைய சில நிமிடங்கள் ஓகே. ஆனால், கிளைமாக்ஸ் மனதில் நிற்கவில்லை. ஹீரோயினை ஹீரோ காதலிக்கிறார். ஹீரோயின் இன்னொருவரை காதலிக்கிறார். காதலிக்காக தனது காதலை விட்டுக்கொடுக்கிறார் ஹீரோ. இன்னும் எத்தனை காலம்தான் இந்த கதையை எடுப்பார்களோ என்ற கேள்வி வருகிறது. சரி, இதையாவது கொஞ்சம் டுவிஸ்ட், கலர்புல் பாடல், கமர்ஷியல் விஷயங்களை கலந்து கொடுத்து இருக்கலாம். அந்த பாணியிலும் ரொம்பவே வறட்சி. இளையராஜா இசை என்று டைட்டிலில் கார்டில் போடுகிறார்கள். பாடலிலும் திருப்தி இல்லை. ஊட்டியில் எடுத்த படமாக இருந்தாலும் மனசுக்கு எந்த வகையிலும் குளிர்ச்சியையோ, தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முன்னணி டெக்னீஷயன்கள் இருந்தும், அஜயன் பாலாவின் வாசிப்பு திறமை இருந்தும், கதை, திரைக்கதையால் மைலாஞ்சி மிக சுமாரான படமாகிறது. போட்டோகிராபர், சைக்களில் வரும் பெண், மெயில் கடிதம், முக்கோண காதல், இதெல்லாம் அரதபழசாகிவிட்டதால் படம் ஈர்க்கவில்லை.
மைலாஞ்சி - இளையராஜா இசை, செழியன் கேமரா. ஆனாலும், ரசிக்க முடியலை