எல்.எஸ்.எஸ்
தயாரிப்பு : ஜே.பி.பிலிம்ஸ்.
இயக்கம் : ஆர்.மகாலட்சுமி முருகன்
நடிப்பு : ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன்அத்வானி, படவா கோபி, வினோதினி
இசை : அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ்குமார்.
வெளியான தேதி : பிப்ரவரி 20, 2026
நேரம் : 2 மணிநேரம் 18 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
காலேஜில் தன்னுடன் படிக்கும் வட இந்திய பெண் சிம்ரன் அத்வானியை காதலிக்கிறார் ஹீரோ ஆதவ் கிருஷ்ணா. காசியில் இருக்கும் என் அம்மாவிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஹீரோவை அங்கு அழைத்து செல்கிறார் ஹீரோயின். அங்கே அவர் திடீரென காணாமல் போக, என் மகள் எங்கே என அவரின் பணக்கார தந்தை ஹீரோவை மிரட்ட, ஹீரோயினுக்கு என்ன நேர்ந்தது? காதலர்கள் இணைந்தார்களா என்பது எல்எஸ்எஸ் படக்கரு. லவ், ஷேர், சப்ஸ்கிரைப் என்பதன் சுருக்கம் எல்.எஸ்.எஸ்
முதற்பாதி சென்னையிலும், பிற்பாதி காசியிலும் நடக்கிறது. ஹீரோ, ஹீரோயின் அறிமுகம், அவர்களின் காதல் வளர்வது, வீட்டில் காதலியை அறிமுகப்படுத்துவது என வழக்கமாக கதையாக படம் தொடங்கி நகர்கிறது. ஹீரோயின் அழகாக இருக்கிறார். நடிப்பு கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இடைவேளைக்குபின் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. கிளைமாக்சில் வந்து சில வசனம் பேசுகிறார். காதல் காட்சிகளில் ஸ்பெஷல் இல்லை. ஹீரோ அம்மாவாக வரும் வினோதினி சீரியல் பைத்தியமாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட சில சீன்கள் ஓரளவு ரசிக்க முடிகிறது. ஹீரோ தம்பியாக வரும் பையன் சில டயலாக், கியூட் மூவ்மெண்டில் கவர்கிறார். முதற்பாதியில் பெரிய ஈர்ப்பு இல்லை
தன் அம்மாவிடம் ஹீரோவை அறிமுகப்படுத்த காசிக்கு ஹீரோயின் செல்வதில் இருந்து கதை சூடு பிடிக்கிறது. காசியில் ஏதோ நடக்க போகிறது என தெரிகிறது. அது நடக்கிறது. ஹீரோயின் திடீரென காணாமல் போக, அவரின் பணக்கார அப்பா என் ட்ரி ஆகிறார். வழக்கமாக அப்பா மாதிரி என் பெண் எங்கே என டார்ச்சர் செய்கிறார். அந்த காட்சிகளும் பல படங்களில் பார்த்ததுதான்.
சரி ஹீரோயினை யாராவது கடத்தி இருப்பார்களோ என நினைத்தால் அதிலும் சொதப்பல். அவரோ ஆக்சிடெண்ட் ஆகி, கோமாவில் இருக்க, அவர் உடல் உறுப்புகளை திருட ஒரு கூட்டம் முயற்சிக்க, என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை செல்கிறது.
ஹீரோ கொஞ்சம் காதல் செய்கிறார். காசியில் காணாமல் போன ஹீரோயினை தேடுகிறார். போலீசிடம் அடி வாங்குகிறார். பெரிதாக ஈர்க்கவில்லை. ஹீரோயிசமும் அதிகம் இல்லை.
ஹீரோயின் அப்பாவாக வருபவர் அஜித் சாயலில் இருக்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் ஏமாற்றிவிடுகிறார். காசியில் அவர் அம்மாவை காண்பிக்கும்போது ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார் இயக்குனர். கதையில் அவருக்கு முக்கியத்துவம், அவருக்கும் அந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கும் என நினைத்தால் அதுவும் நடக்கவில்லை. இப்படி திரைக்கதை படுவீக். இதற்கிடையில் ஹீரோயின் காணமல் போனது தொடர்பாக ஒரு காமெடியில் அவ்வப்போது வந்து செல்கிறார் சாம்ஸ். அது மட்டும் கொஞ்சம் ஆறுதல். இடைவேளைக்குபின் காசியில் நடக்கும் சீன் களில் சினிமாத்தனம் அதிகம். அது என்ன சொல்ல வர்றீங்க என நெளிய வைக்கிறது.
காசியை கலர்புல்லாக, அழகாக காண்பிக்கிறது சதீஷ்குமார் கேமரா. இசை, பாடலில் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.
காதல் கதை, கடத்தல், சஸ்பென்ஸ், திரில்லர் என செல்லும் படத்தில் அழுத்தம், சுவாரஸ்யம் இல்லாததும், புதுமுகங்கள் நடித்து இருப்பதும் படத்தின் மைனஸ். கடத்தல் போர்சன், ஆஸ்பிட்டல் சீன்கள் போரடிக்கிறது. கிளைமாக்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கணும், அதுவும் நடக்கவில்லை.
எல்.எஸ்.எஸ் - லவ் இருக்கிறது, லைக் பண்ண முடியலை