உள்ளூர் செய்திகள்

அறிவான்

தயாரிப்பு : எம்.டி.பிலிம்ஸ்.
இயக்கம் : அருண் பிரசாத்
நடிப்பு : ஆனந்த் நாக், ஜனனி, மோனிஷா
இசை : கார்த்திக்
ஒளிப்பதிவு : யஸ்வந்த் பாலாஜி
வெளியான தேதி : பிப்ரவரி 20, 2026
நேரம் : 1 மணிநேரம் 53 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக் சஸ்பென்சன் முடிந்து, நெய்வேலி ஸ்டேஷனில் பணியில் சேர்கிறார். அப்போது 3 பேர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அது குறித்து விசாரிக்க ஆரம்பிக்க, ஸ்டேஷனில் ஒரு பெண்ணும் கொல்லப்படுகிறார். நாலு கொலைகளை செய்து யார் என பல்வேறு கோணத்தில் துப்பறிகிறார். கடையில் அவர் காதலி ஜனனியையும் அந்த கொலையாளி கொல்ல நினைக்க, ஹீரோ அவரை காப்பாற்றினாரா? கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை சொல்லும் படம் அறிவான். கொலை, கொலையாளி, விசாரணை, கொலைக்கான காரணம்... இந்த கோணத்தில் ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், அறிவான் படத்தின் திரைக்கதை வித்தியாசமானது..

ஒரே பாணியில் கழுத்து அறுக்கப்பட்டு கொலைகள் நடக்க, க்ளூ கிடைக்காமல் தத்தளிக்கிறார் ஹீரோ. அப்போது லோக்கல் நிருபரான ஹீரோயின் ஜனனி உதவியுடன், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை பற்றி விசாரிக்க ஒரு அக்கா, தம்பி பின்னணி தெரிகிறது. அவர்களை தேட ஆரம்பிக்கிறார். அவர்களை கண்டுபிடித்தபோது என்ன நடந்தது. இந்த கொலைகளுக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற ரீதியிலும் கதை பரபரப்பாக நகர்கிறது. திரைக்கதை, திருப்பங்கள், கிளைமாக்ஸ் இதுதான் அறிவான் படத்தில் பெரிய பிளஸ்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ஆனந்த் நாக் சீரியஸ் ஆக இருந்தாலும், மிடுக்காக நடித்து இருக்கிறார். குறிப்பாக விசாரணை காட்சிகள், தனக்கு தானே பல கேள்வி கேட்டு பார்வையாளர்களை கவர்கிறார். அவருக்கு துணையாக இருக்கும் அந்த கான்ஸ்டபிள் கேரக்டரும் நல்ல தேர்வு. கொலையாளியை அவர் நெருங்கும் விதம், சில விஷயங்களை தெரிந்து மிரள்வது, கிளைமாக்ஸ் பைட் ரசிக்கும்படி உள்ளது.

கிரைம் கதை என்பதால் காதல், டூயட் இதெல்லாம் இல்லை. அது சேர்க்காததும் நல்லது. ஜனனி சில சீன்களில் வந்து போகிறார். அவருக்கு அதிக வேலை இல்லை. நெய்வேலியை, துப்பறியும் காட்சிகளை சிறப்பாக காண்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் யஸ்வந்த்.

கிளைமாக்சில் கொலையாளியாக வரும் அந்த இருவரின் நடிப்பு, கோபம், அவர்களை கொலை செய்ய தூண்டும் அந்த பிளாஷ்பேக்தான் படத்தின் பெரிய பிளஸ். அந்த விஷயத்தை அவர்கள் கேரக்டரை அழுத்தமாக, பதைபதைப்பாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

கொலைகள், விசாரணை சம்பந்தப்பட்ட சீன்களை இன்னும் விரிவாக காண்பித்து இருக்கலாம். முதற்பாதியில் பல இடங்களில் கத்தரி போட்டு இருக்கலாம். ஆனாலும் கொலையாளி யார் என்பதை மறைத்து வைத்திருந்த சஸ்பென்ஸ் பிரமாதம்.

நெய்வேலியில் வேறு போலீஸ் கிடையாதா? ஒரு முக்கியமான வழக்கை ஒருவர் மட்டுமே விசாரிப்பாரா? தொழில் நுட்ப உதவிகள் போலீசுக்கு உதவாதா என கேள்விகள் எழுகின்றன. கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கிரைம் கதைக்கான விறுவிறுப்பு, பின்னனி இசை சுமார்.

ஆனாலும் கிரைம் கதைகளில் அறிவான் கவனிக்க வைக்கிறது. இயக்குனர் சொல்ல வரும் விஷயம் கவனிக்க பட வேண்டியது. புதுமுகங்களுக்கு பதில் ஓரளவு தெரிந்த முகங்கள் நடித்து இருந்தால் படம் ஓரளவு பேசப்பட்டு இருக்கும். ஆனாலும் இயக்குனரின் புது முயற்சி, திரைக்கதை திறமையை உற்சாகப்படுத்தலாம். கொலையாளிகளாக நடித்த அந்த இருவர் நடிப்பை பாராட்டலாம்.

அறிவான் - கடைசி அரைமணி நேரம் கதை, டிவிஸ்ட், விறுவிறுப்பு அபாரம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !