மை டியர் டாலி
தயாரிப்பு : சிம்ஹமூர்த்திசினிமாஸ்
இயக்கம் : ஏ. அரவிந்த்ராஜ்
நடிப்பு : பப்பு, அனுபமா, கேபிஓய் ராஜவேலு,
இசை : பாசில் நவாஸ்கான்
ஒளிப்பதிவு : பாலாஜிசேகர்
வெளியான தேதி : பிப்ரவரி 20, 2026
நேரம் : 1 மணிநேரம் 51 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ வி.ஜே பப்பு தனது டீம் லீடரான அனுபமாவை காதலிக்கிறார். வேறு ஒருவரை அவர் காதலிப்பதை அறிந்து அந்த வேலையை விடுகிறார். ஆனால், சூழ்நிலை காரணமாக அனுபமாவை அவர் திருமணம் செய்கிறார். நம் பெற்றோர்களுக்காக 6 மாதங்கள் கணவன் மனைவி போல வாழ்வோம். அப்புறம் பிரிவோம் என இரண்டுபேரும் முடிவெடுக்கிறார்கள். அதன்படியே, பிரிந்து செல்கிறார் அனுபமா. அவரை மறக்க முடியாத பப்பு அவரை போலவே ஒரு பொம்மையை செய்து அதனுடன் வாழ்கிறார். அதை அறிந்த அனுபமா வீட்டுக்கு வந்து பார்க்கிறார். தானே பொம்மை மாதிரி நடிக்கிறார். அப்புறம் என்ன நடக்கிறது என்பது மை டியர் டாலி படத்தின் கதை.
காதல், காதல் தோல்வி, திருமணம், சண்டை, மீண்டும் பிரிவு, அன்பு என பல விஷயங்களை பேசுகிறது மை டியர் டாலி. காமெடி பண்ணிக்கொண்டிருந்த பப்பு இதில் கதை நாயகனாக ஆகியிருக்கிறார். ஆனாலும், அவர் நடிப்பில், பாடி லாங்குவேஜில் காமெடி டோன் இருக்கிறது. சில சமயம் தமிழ்ப்படம் சிவா மாதிரி நடிக்கிறார். அனுபமாவை காதலிப்பது, காதல் தோல்வியால் தவிப்பது, அவரே திருமணம் செய்து ஒரே வீட்டில் தனியாக வாழ்வது என முதற்பாதியில் சுமாராக நடித்து இருக்கிறார். அனுபமா பிரிந்தபின் அச்சு அசலாக அவரை போலவே ஒரு பொம்மை செய்து அதனுடன் பேசுவது, சரக்கு அடித்துவிட்டு உளறுவது, தனது அன்பை வெளிப்படுத்துவது என இரண்டாம் பாதியில் நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, பொம்மையாக இருப்பது அனுபமா என்பதை தெரியாமல் அவர் நடிக்கும் இடங்கள் ஓகே. என்ன, ஹீரோ மாதிரியான காஸ்ட்யூட், ஹேர்ஸ்டைல், லுக் அவரிடம் இல்லை. அதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஹீரோயினாக வரும் அனுபமா ஹோம்லி, ஓரளவு நடித்து இருக்கிறார். பப்புவிடம் சண்டை போடும் இடங்கள், பொம்மையாக நடிக்கும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். கிளைமாக்சில் தான் தவறு செய்துவிட்டோம் என அறிந்து பீலிங்கை கொட்டுகிறார். பப்பு அம்மா வரும் காட்சிகள், நண்பன் ராஜவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆறுதல்
படம் முழுக்க பப்பு, அனுபமா சீன்களே அதிகம். மற்றவர்களை அதிகம் நடிக்கவைக்கவில்லை. அந்த பக்கம் ஏனோ கதையும் போகவில்லை. பப்புவின் காமெடி பேச்சு, அப்பாவி முகம் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்தாலும் முதற்பாதி சுமார், அந்த பொம்மை மேட்டர் வந்தபின்னர்தான் கதை சூடுபிடிக்கிறது. ஒருவரால் அச்சு அசலாக பொம்மை மாதிரி நடிக்க முடியுமா? அதை ஹீரோயின் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுவது திரைக்கதை மைனஸ்.
பெரும்பாலும் வீடு, ஆபீசில் காட்சிகள் நகர்வதும், படம் முழுக்க ஹீரோ அதிகமாக பேசிக்கொண்டே இருப்பதும் போரடிக்கிறது. இசை, ஒளிப்பதிவு சுமார் ரகம்தான். படத்தில் உருப்படியான விஷயம், கிளைமாக்ஸ் அதற்கு முந்தைய காட்சிகள்தான். அதற்காக மீதமுள்ள படத்தை பொறுமையாக பார்க்க வேண்டிய கட்டாயம். பப்பு படமாச்சே காமெடி இருக்கும், ரசிக்கலாம் என்று நினைத்தால் ஒரு எலி காமெடியில் மட்டுமே சிரிப்பு வருகிறது. வித்தியாசமான கதைதான். அதை சரியாக சொல்ல முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.
மை டியர் டாலி - பொம்மை மூலம் காதலை சொல்லும் புது முயற்சி. திரைக்கதையும் பொம்மை மாதிரி