உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / முஸ்தபா முஸ்தபா

முஸ்தபா முஸ்தபா

தயாரிப்பு: பிரதீப் மகாதேவன்
இயக்கம்: பிரவீன் சரவணன்
நடிப்பு: சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகொட்லா, கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா
ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ
இசை: ஜோன்ஸ் ரூபர்ட்
வெளியான தேதி: மார்ச் 6, 2026
நேரம்: 1 மணி 58 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளை சதீஷ் சம்பந்தப்பட்ட ஒரு கிளுகிளு வீடியோ யூடியூப்பில் வேகமாக பரவுகிறது. அதை டெலிட் செய்யாவிட்டால் கோபக்காரியான காதலி மோனிகா திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று பயப்படுகிறார் சதீஷ். அந்த வீடியோவை அழிக்க நண்பர்கள் சுரேஷ்ரவி, கருணாகரன் துணையுடன் என்ன செய்கிறார். அந்த வீடியோவில் இருப்பது என்ன? அதை எடுத்தது யார்? பரப்பியது யார்? கடைசியில் சதீஷ், மோனிகா திருமணம் நடந்ததா? என்பது 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் கதை. புதுமுகம் பிரவீன் சரவணன் இயக்கியிருக்கிறார்.

தனியார் டிவி சேனலில் வேலை செய்யும் சதீஷ், அவருடைய நண்பர்கள் சுரேஷ்ரவி, கருணாகரனை சுற்றி நடக்கும் நட்பு சம்பந்தப்பட்ட காமெடி கதை. அதனால் இந்த தலைப்பு. இதில் கொஞ்சம் காமெடி, காதல், கவர்ச்சியும் இருக்கிறது. சின்ன பொய் சொன்னாலே டென்ஷன் ஆகிறார் சதீஷ் காதலி மோனிகா. அவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில், ஒரு 'சூழ்நிலையில்' ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருக்கமாக இருக்கும் சதீஷ் சம்பந்தப்பட்ட சில நிமிட கிளுகிளு வீடியோ யூடியூப்பில் வைரல் ஆகிறது. அதை எப்படியாவது அழித்துவிட்டு, தனது வாழ்க்கையை நல்ல படியாக தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சதீஷ்.

அவர்தான் ஹீரோ என்றாலும் அதற்கான பில்டப் எதுவும் இல்லாமல் ஓரளவு இயல்பாக நடித்து இருக்கிறார். காதலியுடன் சண்டை, நண்பர்களால் தொல்லை. அந்த வீடியோவால் டென்ஷன் ஆகிய இடங்களில் நடிப்பு ஓகே. ஆனால், அவருக்கே உரிய காமெடி டச் கூட நிறைய இடங்களில் மிஸ்சிங். அவருடைய காதல் காட்சிகளும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. அந்த வீடியோவை அழிக்க தவிக்கும் சீன்களிலும், அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை தெரிந்து கொதிக்கும் சீனிலும் மட்டும் கவனிக்க வைக்கிறார். பாடல் காட்சி சுமார் ரகம்.

சதீஷ் நண்பராக வரும் சுரேஷ்ரவியும், கருணாகரனும் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இடைவேளைக்குபின் கருணாகரன் நடிப்பு, அவர் சம்பந்தப்பட்ட டுவிஸ்ட், அவரின் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. என்ன, அவருக்கு ஒரு காதல் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட உறவுமுறை பெயர் ஓவர். எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்று பலருக்கு கோபம் வருவது உறுதி. இவர்களை தவிர விஜய் டிவி புகழ் இருக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளில் சிரிப்புக்கு பதில் கொதிப்புதான் வருகிறது. அந்த அளவுக்கு நடித்து கொட்டியிருக்கிறார்.

சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி, லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன் என பலர் இருந்தாலும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. சுரேஷ் ரவி காதலியாக வரும் மானசா சில சீன்களில் வந்து செல்கிறார். சதீஷ் காதலியாக வரும் மோனிகாவுக்கு அவரை விட இன்னும் கொஞ்சம் சீன்கள் அவ்வளவுதான். இரண்டு ஹீரோயின்களையும் வேஸ்ட் செய்து இருக்கிறார் இயக்குனர். கருணாகரன் காதலியாக வரும் அந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்தால், அவர் பழைய வி.ஜே மகேஸ்வரி.

அந்த வீடியோவில் இருப்பவராக வரும் ஐஸ்வர்யா தத்தா கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். அவர் வரும் இடங்கள், வசனங்கள் கொஞ்சம் ஆறுதல். அந்த வீடியோ சம்பந்தப்பட்ட பின்னணி, அதை பரவும் விதம், பரப்பிய விதம் இளைஞர்களுக்கு பிடிக்கும். கிளைமாக்ஸ் சில நிமிடம் ரசிக்கும்படி இருக்கிறது. விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவும், ஜோன்ஸ் இசையும் பெரிதாக கை கொடுக்கவில்லை. விஜே பார்வதியிடம் கதை சொல்வதாக திரைக்கதை விரிகிறது. அது போர். ஒரு டுவிஸ்ட் மட்டும் ஓகே.

காமெடி படமாக எடுக்க நினைத்து இருக்கிறார்கள். ஆனால், சில இடங்களில் மட்டுமே சிரிப்பு கொஞ்சமாக வருகிறது. முஸ்தபா முஸ்தபாவை நட்பை கொண்டாடும் படமாக்க நினைத்து இருக்கிறார் இயக்குனர். அதுவும் பலனிக்கவில்லை. கவர்ச்சியும் செட்டாகவில்லை. இவ்வளவு நடிகர்கள் இருந்தும், எவ்வளவோ முயற்சித்தும் பாஸ் மார்க் வாங்கவே தத்தளிக்கிறது படம்.

முஸ்தபா முஸ்தபா - சுமாரான பிரண்ட்ஷிப்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !