உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / கெணத்த காணோம்

கெணத்த காணோம்

தயாரிப்பு: ஆர்.ரமேஷ்பாபு
இயக்கம்: சுரேஷ் சங்கய்யா
நடிப்பு: யோகிபாபு, லவ்லின், ரேச்சல், ஜார்ஜ் மரியான்
ஒளிப்பதிவு: தியாகராஜன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
வெளியான தேதி: மார்ச் 13, 2026
நேரம்: 1 மணி 56 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பார்கள். தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கோடாங்கி பட்டி கிராம மக்கள் கிணறு வெட்ட ஆரம்பிக்கும் போது டைனோசர் புறப்படுகிறது. அதாவது, டைனோசர் எலும்புகள் அங்கே கிடைக்க, கிராமமே தொல்லியல் துறை வசமாகிறது. அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? டைனோசர் எலும்பு என்ன ஆனது? அந்த கிராமத்துக்கு தண்ணீர் வந்ததா? மக்கள் பிரச்னை தீர்ந்ததா என்பதே கெணத்த காணோம் படக்கதை.

கதைநாயகனாக யோகிபாபு நடித்துள்ள படம். அவர் கிராமத்து அம்மன் கோயில் பூசாரியாக வருகிறார். ஊரில் நிலவும் தண்ணீர் பிரச்னை காரணமாக அவருக்கு பெண் கொடுக்க மறுக்கிறார் ஹீரோயின் லவ்லின் தந்தை. ஊர் மக்கள் எவ்வளவோ போராடியும் தண்ணீர் பிரச்னை தீர்வதாக இல்லை. அந்த சமயத்தில் ஊர் பெரியவரான கவிஞர் விக்ரமாதித்யன் இடத்தில் கிணறு தோட்ட ஆரம்பிக்க, அரசு அதிகாரிகள், போலீஸ், மந்திரி வருகிறார்கள், ஆனால், தண்ணீர் மட்டும் வரவில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்ற ரீதியில் கொஞ்சம் சமூக அக்கறையுடன் காமெடி கலந்து படத்தை இயக்கியிருக்கிறார் மறைந்த சுரேஷ் சங்கய்யா. இவர் கிடாயின் கருணை மனு என்ற நல்ல படத்தின் இயக்குனர்.

யோகிபாபு நடிச்ச படமாச்சே கொஞ்சமாவது சிரிப்பு இருக்கும் என நம்பினால், அது ரொம்பவே மிஸ்சிங். ஹீரோ எப்படி காமெடி பண்ணுவார் என்ற ரீதியில் அவர் கேரக்டரை கொண்டு சென்று இருக்கிறார்கள். அவரும் ஒன்றிரண்டு ஒன்லைன் பஞ்ச் கொடுத்து இருக்கிறார். அதுவும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. படம் முழுக்க ஒரு வித சீரியஸ்தனத்துடன் நடித்து இருக்கிறார் யோகிபாபு. அவரின் டயலாக் டெலிவரியில் கூட இறுக்கம். ஏதாவது கால்ஷீட் பிரச்னையில, உடல்நல பிரச்னையில இந்த படத்துல நடித்தாரா என தெரியவில்லை. கடைசியில சில நிமிடங்கள் மட்டும் அவர் கேரக்டரின் முக்கியத்துவம் தெரிகிறது. மற்றபடி, யோகிபாபுவால் கதைக்கு பலன் இல்லை. இந்த படத்தால் யோகிபாபுக்கு பிரயோஜனம் இல்லை.

ஹீரோயினாக வருகிற லவ்லின் ஒன்றிரண்டு சீன்களில் மனதில் நிற்கிறார். ஆனால், அவர் கேரக்டரை காணாமல் ஆக்கிவிட்டு, கடைசியில் திருமணத்தில் சேர்த்து வைத்து இருக்கிறார்கள். பல படங்களில் தனது நடிப்பால் கலக்கிய ரேச்சலுக்கு இதில் தொல்லியல்துறை அதிகாரி வேடம். அவரும் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட தாத்தாக்கள், ஊர்மக்களாக பலர் நடித்து இருக்கிறார்கள். அவர்களின் செயல்கள், நடிப்புதான் படத்தின் பலம். குறிப்பாக, தியாகியாக வரும் கவிஞர் விக்ரமாதித்தன், கிணறு தோண்ட தண்ணீர் இருக்கிறதா என 'நோட்டம்' பார்க்கும் தாத்தா, கிண்டல் அடிக்கும் ஊர் பெரிசுகள்,ஹலோ கந்தசாமி, ஊர் பஞ்சாயத்து தலைவர், அவர் மனைவி என சின்ன, சின்ன கேரக்டர்கள், அவர்களின் இயல்பான வசனம், நடிப்புதான் படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது. ஜார்ஜ் மரியானுக்கு அந்த கலெக்டர் வேடம் செட்டாகவில்லை. கடைசியில மந்திரியாக வரும் கவிதாபாரதி நடிப்பு ஓகே.

தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் ஊர் மக்கள், கிணறு வெட்டும்போது டைனோசர் எலும்பு கிடைக்க, அந்த ஊரின் தலைவிதி மாறுகிறது என்ற நல்ல கரு. ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு சொதப்ப வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சொதப்பி இருக்கிறார்கள். பல சீன்களில் உயிர் இல்லை, காமெடி இல்லை. ஊர் மக்கள், போலீஸ், கிளைமாக்ஸ் சம்பந்தப்பட்ட சில இடங்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் பகடியுடன் வித்தியாசமாக இருக்கிறது. அந்த கிராமத்தை, மக்களின் வாழ்வியலை நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன். ஒரு ராமநாதபுரம் கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு நிவாஸ் கே பிரசன்னா இசையில் குறிபிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை.

ஒரு கிராமத்து கதையை நையாண்டி நக்கல் கலந்து சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். கிராமத்து குசும்பு, வெள்ளந்தி சில இடங்களில் தெரிகிறது. நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கலாய்த்து இருக்கிறார்.அரசு, அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கத்தை அப்படியே காண்பித்து இருக்கிறார். இன்றும் தண்ணீருக்காக பல கிராமங்கள் போராடுகிறது. அதை விட்டு எதிர்கால ஆராய்ச்சி, தொல்லியல் என பணத்தை இறைக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

எளிய கிராமத்து மக்கள் பல்வேறு ஆட்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் நல்ல மெசேஜ். இதெல்லாம் படத்தில் உள்ள நல்ல விஷயங்கள். ஆனால், சினிமாவாக பல இடங்களில், பல சீன்கள் வொர்க் அவுட் ஆகவில்லை. கடைசி சில நிமிடங்களில் வரும் விறுவிறுப்பு படம் முழுக்க வந்திருந்தால் இந்த கிணறு பொங்கி வழிந்து இருக்கும். யோகிபாபு உட்பட பல நல்ல நடிகர்கள் இருந்தும், அதற்கான களம் இருந்தும் சுவாரஸ்யம் இல்லை. படம் எடுத்த இயக்குனர் மறைந்துவிட்டதால், அவரை அதிகம் விமர்சிக்க வேண்டாம்.

கெணத்த காணோம் - யோகிபாபு இருந்தும் 'சிரிப்பை' காணோம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !