உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / வெஞ்சென்ஸ்

வெஞ்சென்ஸ்

தயாரிப்பு: ஏ.பி.அசோக்குமார்
இயக்கம்: ராகுல் அசோக்
நடிப்பு: அபர்ணதி, ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், காளிவெங்கட், சாய்தன்யா
ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு
இசை: கார்த்திக்ராஜா
வெளியான தேதி: மார்ச், 13, 2025
நேரம்: 2 மணி 29 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

தாய் நாடு என்ற கற்பனை மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கலெக்டராக இருக்கும் அபர்ணதியின் பழிவாங்கும் கதைான் வெஞ்சன்ஸ். எதற்காக அவர் பழிவாங்குகிறார், யாரை பழிவாங்குகிறார். கிளைமாக்சில் அவருக்கு நடந்தது என்ன என்பதை சில உண்மை சம்பங்களை, நிறைய கற்பனைகள் கலந்து அரசியல் பின்னணியில் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ராகுல்அசோக்.

அதிரடி கலெக்டராக இருக்கும் அபர்ணதிக்கும் அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட எதிரிகள் முளைக்கிறார்கள். அவரால் பாதிக்கப்பட்டவர்களும் அவரை பழிவாங்க துடிக்கிறார்கள். அப்போது பல்வேறு தரப்பு பிரஷரால் தனது பதவியை இழக்கும் அபர்ணதி, பூ ஒன்று புயலானது பாணியில் எப்படி திருப்பி அடிக்கிறார், அரசியலில் என்னென்ன சாணக்யத்தனத்தை பயன்படுத்துகிறார் என்ற ரீதியிலும் கதை நகர்கிறது.

முதல்முறையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரில் நடித்து இருக்கிறார் அபர்ணதி. அந்த கேரக்டருக்கு அவர் முகம், நடிப்பு, நடை, உடை செட்டாகி இருக்கிறது. கலெக்டராக அவர் எடுக்கும் நடவடிக்கைகள், பின்னர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவரின் செயல்கள் விறுவிறுப்பு. சின்ன வயதில் இருந்து புகழுக்கு அடிமையாகி, ஒருவித பழிவாங்கும் தன்மையுடன் அவர் இருப்பது மாதிரி காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அந்த இடங்களில் அபர்ணதி நடிப்பு அருமை.

ஒரு பிரபல மத்திய அமைச்சரின் சாயலில் பவர்புல் மந்திரி கேரக்டரில் வருகிறார் ஜான்விஜய். அவரின் வில்லத்தனம், அந்த டயலாக் டெலிவரி ரசிக்க வைக்கிறது. முதல்வராக வருகிற இளவரசு, எதிர்க்கட்சி தலைவராக வருகிற லிவிங்ஸ்டன் நிஜ அரசியலில் சிலரை நினைவு படுத்துகிறது. அதிலும் லிவிங்ஸ்டன் கேரக்டர் செம. பிளாஷ்பேக்கில் அபர்ணதி அப்பாவாக சில சீன்களில் வந்தாலும் மனதில் நிற்கிறார் காளிவெங்கட். மற்றபடி பிரதமராக வரும் அந்த பெண், கவர்னராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் எக்கச்சக்க செயற்கைதனம்.

ஒரு பொலிடிக்கல் டிராமாவை, எமோஷன், சட்டயர், வெஞ்சென்ஸ் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஆனால், பல இடங்களில் அது நேர்த்தியாக இல்லை அல்லது பல இடங்களில் அதுவே மைனஸ் ஆக இருக்கிறது. முதல்வர், கவர்னர், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட சீன்களில் பட்ஜெட் காரணமாக மாஸ் இல்லை. ஏதோ பஞ்சாயத்துபோர்டு தலைவர், எம்எல்ஏ மாதிரியான தோற்றம் வருகிறது. அதேபோல், சில அரசியல் கேரக்டர்களை, சில அரசியல் சம்பவங்களை சொல்ல முயற்சித்து, பயந்துபோய் அரைகுறையாக, மக்களுக்கு புரியாதபடி சொன்னதும் மைனஸ். அபர்ணதி கேரக்டரிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒரு பப்ளிசிட்டி பைத்தியம், பழி வாங்கும் குணம் என காண்பித்து இருப்பது அந்த கேரக்டர் மீது மரியாதை அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. பிரபு கேமரா, இசையில் தாக்கம் இல்லை

அபர்ணதியின் கேரக்டரிலும் தெளிவு இல்லை. ஒரு கலெக்டர் எப்படி அரசியல்வாதியின் ஆலோசகராக மாறுவார். அவரை எப்படி 'அந்த' மாதிரி அவமானப்படுத்த முடியும். பழிவாங்கும் அவரின் கேரக்டரில் திடீரென பாசத்தில் மாட்டி தவிப்பது ஏன்? அதற்கு பின்னணி என்ன? என பல விஷயங்களில் குழப்பங்கள், ஏகப்பட்ட கேள்விகள். இவ்வளவு பிரச்னைகள், சம்பவங்கள் நடந்தும் அடுத்தடுத்து அபர்ணதி பவராக இருப்பது என்ற கேள்வியும் சர்ச்சை. கிளைமாக்சில் தனது ஆர்வகோளாறு த னத்தை ரொம்பவே அதிகமாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். ஒரு கவர்னரை அப்படியெல்லாம் செய்ய முடியுமா?

அரசியல் கதை எடுக்கிறேன் என்று அரைகுறை கதை எடுத்து பொறுமையை சோதித்து இருக்கிறார்கள். அபர்ணதி கேரக்டர், ஜான்விஜய் நடிப்பு தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

வெஞ்சென்ஸ் - ஆமா, ரசிகர்களை வென்சென்ஸ் ஆக செஞ்சிட்டாரு டைரக்டரு



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !