கொலைச்சேவல்
தயாரிப்பு : ஆர்.பி.பிலிம்ஸ்
இயக்கம் : வி.ஆர்.துதிவாணன்
நடிப்பு : கலையரசன், தீபாபாலு, பாலசரவணன், கஜராஜ்
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இசை : சாந்தன்
வெளியான தேதி : மார்ச், 13, 2025
நேரம் : 1 மணிநேரம் 47 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
காதல் திருமணம் செய்து கொண்ட கலையரசன், தீபா பாலு ஜோடி கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசிக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக தீபா இருப்பதால், தங்கள் குடும்ப வழக்கப்படி காட்டில் இருக்கும் குல தெய்வம் கோயிலுக்கு அனைவரும் செல்கிறார்கள். இந்த காதல் திருமணத்தை எதிர்க்கும் மனநிலையில் உள்ள தீபா அப்பா, தம்பி, அவரின் உறவினர்கள் கொடூர ஆயுதத்துடன் அந்த கோயிலுக்கு வருகிறார்கள். அங்கே குலதெய்வம் சிலை முன்பு என்ன நடக்கிறது என்பது கொலைச்சேவல் படத்தின் கதை.
மிக எளிமையாக, சினிமாத்தனம் இல்லாமல், கிராமத்து பின்னணியில் குல தெய்வம் கோயிலுக்கு பலி கொடுக்க, ஒரு சேவலுடன் டிராக்டரில் புறப்படுவதில் இருந்து கதை தொடங்குகிறது. கலையரசன் உறவினர்கள், நண்பர்களின் கேலி, கிண்டல், பழங்கதை என்று கொஞ்சம் சீன்கள் விரிகிறது. அடுத்து கலையரசன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பைக்கில் கோயிலுக்கு அழைத்து செல்கிறார். அதற்குமுன் அவரின் காதல் மலர்ந்த கதை பிளாஷ்பேக் ஆக விரிகிறது. அனைவரும் கோயில் பூஜை முடித்து வீட்டுக்கு புறப்பட தயாராகும்வரை, இது என்ன கதை? என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை. கடைசி சில நிமிடங்கள்தான் கதையின் கரு புரிகிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது பதைபதைப்புடன் தெரிகிறது. அந்த சில நிமிட காட்சிக்காக இவ்வளவு நேரம் படத்தை இழுத்துகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
கலையரசன் முதற்பாதி நடிப்பில் பெரிதாக சொல்வதற்கு இல்லை. ஆனால், கிளைமாக்சில் அவர் துடிப்பது, மனைவியை பாதுகாக்க வேண்டும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று கதறுவது கண்களை கலங்கி வைக்கிறது. அவருக்கும் தீபா பாலுக்குமான காதல் காட்சிகளி்ல சில இடங்கள் ஓகே.
புதுமுகம் தீபாபாலு பெரும்பாலான சீன்களின் கர்ப்பிணியாகவும், பிளாஷ்பேக்கில் காதலியாகவும் வருகிறார். அவரின் இயல்பான நடிப்பு, டயலாக் டெலிவரி, குறிப்பாக, கிளைமாக்ஸ் நடிப்பு அபாரம்.
இவர்களை தவிர, கலையரசன் உறவினர்கள், நண்பர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் தாத்தா, பாட்டியாக வருபவர்களின் செல்ல சண்டை, பாசம் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. நண்பராக வரும் பாலசரவணன் காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை. கிளைமாக்சில் மட்டும் அவர் நடிப்பில் கொஞ்சம் உருக்கம். ஹீரோயின் தீபாவின் அப்பாவாக வரும் கஜராஜ் அதிகம் பேசாமல் மிரட்டியிருக்கிறார். இந்த மாதிரியான கதைக்கு நல்ல அழுத்தமான கேரக்டர், அவர்களிடம் இருந்து வலுவான நடிப்பு வராதது பெருங்குறை.
படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பதும், சில பில்டப் சீன் இருப்பதும் போராடிக்கிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார். இந்த கேரக்டர்கள் என்னவாக மாறப்போகின்றன, என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் அடிக்கடி வந்தாலும், கிடைக்கச் வேற பாதையில் கதையில் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர். காதல் திருமணத்துக்கு பிரச்னை, ஜாதி பிரச்னை என்றால் அதில் என்ன சிக்கல். ஹீரோயின் குடும்பத்தினருக்கு ஏனிந்த கொலை வெறி ஆகியவை தெளிவாக, அழுத்தமாக காண்பிக்கப்படவில்லை.
படத்தில் பாராட்ட பட வேண்டிய ஒரே விஷயம். அந்த கிராமத்தை, காட்டை அழகாக, பல்வேறு மாறுபட்ட கோணங்களில் காண்பிக்கும் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு. மனிதர் ரசித்து, ரசித்து சீ்னகளை எடுத்து இருக்கிறார். சாந்தன் பின்னணி இசை பரவாயில்லை. ஆனாலும் படம் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். அதிலும் அந்த முக்கியமான கிளைமாக்ஸ் சீனை கண்களை மூடாமல், கோபப்படாமல், எந்த மனசஞ்சலமும் இல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.
காதல், ஆணவக்கொலை நாடுமுழுக்க இருந்தாலும் இந்தளவுக்கு விரிவாக, வக்கிரமாக காண்பிக்க வேண்டுமா? படம் பார்ப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று இயக்குனர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. பெண்கள், பலவீனமான மனநிலை உள்ளவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை. தான் சொல்ல வந்த கருத்தை இயக்குனர் வேறுமாதிரி எடுத்திருக்கலாம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவில்லையா என்று அவர் கேட்கிறார். அது சரிதான். ஆனால், சினிமா என்பது பொழுதுபோக்குமீடியமாச்சே? இப்படிப்பட்ட படம் பார்க்க ஆட்கள் வேணாமா? சினிமா மூலமாக தனது கருத்தை சொல்ல நினைப்பது
கொலைச்சேவல் - அய்யய்யோ, கொலையா கொன்னு எடுக்கிறாங்க