போலீஸ் பேமிலி
தயாரிப்பு : ஆன் தி டேபிள் புரடக் ஷன்ஸ்
இயக்கம் : பாலு.எம்.
நடிப்பு : காதல் சுகுமார், ராஜாமலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா, சுரேகா
ஒளிப்பதிவு : ஜெயகுமார் தங்கவேல்
இசை : ஜெயா கே தாஸ்.
வெளியான தேதி : மார்ச், 13, 2025
நேரம் : 2 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
ஒரு இரவு நேர வாகன சோதனையின்போது பைக்கில் செல்லும் இளைஞரை மடக்கி விசாரிக்கிறார் போலீஸ்காரரான சுகுமார். அவன் பேக்கில் கஞ்சா இருப்பதை அறிந்து ஸ்டேஷன் அழைத்து சென்று நாலைந்து போலீசார் அடித்து உதைக்கிறார்கள். அப்போது மதுரையில் இருக்கும் பிரபல தாதா பருத்திவீரன் சரவணன் மகன்தான் அந்த இளைஞர் என்பதை அறிந்த போலீசார், மயக்கநிலையில் இருக்கும் அந்த இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறம் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். மறுநாள் அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்க, போலீஸ்தான் அதை செய்தது என நினைத்து சம்பந்தப்பட்ட போலீஸ் குடும்பத்தினரை விரட்டி விரட்டி கொல்கிறார் பருத்திவீரன். அதிலிருந்து தனது 2 மகள்களுடன் தப்பித்தாரா சப் இன்ஸ்பெக்டர்
ராஜாமலைச்சாமி. அந்த இளைஞனை கொன்றது யார்? ஏன்? காதல் சுகுமார் செய்த தவறுகளுக்காக தண்டனை அனுபவித்தாரா? அவருக்கும், பருத்திவீரன் சரவணனனுக்கும் என்ன தொடர்பு என்பது போலீஸ் பேமிலி கதை.
லாக்கப் மரணம், அதற்கு காரணமாக போலீஸ்காரர்களின் குடும்பத்தை கொல்லும் வில்லன் என்ற சிம்பிளான கதை என்றாலும், கொஞ்சம் மாறுபட்ட கதையாக போலீஸ் பேமிலி வந்துள்ளது. காரணம், திரைக்கதை, திருப்பங்கள், கிளைமாக்ஸ். காதல் சுகுமார், பருத்திவீரன் சரவணன் தவிர நடித்தவர்கள் பலர் புதுமுகங்கள். ஆனாலும், மதுரையில் நடக்கும் இந்த கதையை ஓரளவு ரசிக்கலாம். பருத்திவீரன் தாதாவாக வருகிறார். சென்னையில் அட்டகாசம் செய்தவர், சில பிரச்னைகளால் மதுரையில் தங்கியிருக்கிறார். லோக்கல் எம்எல்ஏவுக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கிறார். மகன் பாதிக்கப்பட்ட, தான் அனுபவித்த வலியை அந்த போலீஸ்காரர்கள் அனுபவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தை மட்டும் கொல்லுங்க என்று அடியாட்களுக்கு ஆணையிட்டு அவ்வப்போது வந்து செல்கிறார். அவரை இன்னும் நன்றாக நடிக்க வைத்து இருக்கலாம். கவுரவ வேடம் மாதிரி வந்து செல்கிறார்.
சாதாரண போலீஸ்காரராக வரும் காதல் சுகுமார் சுற்றிதான் கதை நகர்கிறது. அவரும் அதை உணர்ந்து பல சீன்களில் நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் டுவிஸ்ட், பின்னர் நடக்கும் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். கதைநாயகன் மாதிரி வரும் சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமிக்கு பாசக்கார அப்பா வேடம். மகள் சம்பந்தப்பட்ட சீன்களில் பாசத்தை பொழிந்து இருக்கிறார். ஆனாலும் இன்னும் உணர்ச்சி பூர்வமாக நடித்து இருக்கலாம். படத்தில் ஏகப்பட்ட அடியாட்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் கவனிக்க வைக்கிறார்கள். மலைச்சாமி மகளை காதலிக்கும் இளைஞன் நடிப்பு, கேரக்டரும் விறுவிறுப்பு. சபல புத்தி மிக்கவராக வரும் அந்த எம்எல்ஏவும் யாருப்பா இவர் என கேட்க வைக்கிறார். கடைசியில் கொலைகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியின் நடிப்பு, அந்த விசாரணை காட்சிகளும் புதுமை. தாதா ஆட்களுக்கு பயந்து தனது மகள்களுடன் மலைசாமி ஓடி ஒளிவது, மகளை காணாமல் தவிப்பது ஆகியவை இயல்பாக இருக்கிறது.
தன் மகன் சாவுக்கு காரணமான போலீஸ்காரர்களின் குடும்பத்தினரை ஸ்கெட்ச் போட்டு, சரவணன் அடியாட்கள் கொல்வதுதான் கதையின் முக்கியமான விஷயம். அந்த காட்சிகளை புதுமையாக, டீடெயிலாக எடுத்து இருக்கிறார் இயக்குனர், அதேசமயம், இவ்வளவு கொலைகள் நடக்கும்போது உயர் போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் சினிமாதனம். ஒரு தாதா இப்படி போலீஸ் குடும்பங்களை கொன்று கொண்டே இருப்பாரா என்று கேள்வி வருகிறது. படத்தில் ஹீரோயின் என தனியாக இல்லை. மலைச்சாமி 2 மகள்தான் பெண் கேரக்டர்கள். அதில் நிஷா நடிப்பு ஓகே. மதுரை மற்றும் கொடைக்கானல் பகுதிகளை அழகாக காண்பித்துள்ளது ஜெயகுமார் கேமரா. இசை கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறது.
போலீஸ்துறையின் மறுபக்கம், லாக்கப் மரணத்தால் பாதிக்கப்படும் போலீஸ்காரர்களின் மனநிலை, போலீஸ் குடும்பத்தினர் கொல்லப்படும் காட்சிகள், தாதா மகன் கொலைக்கான காரணம், காதல் சுகுமார் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் என படத்தில் பல நல்ல சீன்கள் இருந்தாலும், புதுமுகங்கள் அதிகம் நடித்து இருப்பதும், பட்ஜெட் காரணமாக சிம்பிளாக எடுத்து இருப்பதும் மைனஸ் ஆக தெரிகிறது.
போலீஸ் பேமிலி - வில்லனால் பழிவாங்கப்படும் போலீஸ் 'பேமிலி'யின் கதை