உள்ளூர் செய்திகள்

யூத் (2026)

தயாரிப்பு : கருப்பையா.சி
இயக்கம் : கென்
நடிப்பு : கென், அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி
ஒளிப்பதிவு : விக்கி
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி : மார்ச், 19, 2026
நேரம் : 2 மணிநேரம் 22 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

ஒரு பேக்கரி கடைக்காரர் மகனுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று காதல். அதுவும், பிளஸ் ஒன், பிளஸ் 2 படிக்கும்போது. ஸ்கூல் லைப்பில் அந்த 3 காதல் மலர்ந்தது எப்படி? இந்த காதலால் நண்பர்கள் மத்தியில், குடும்பத்தில் ஹீரோவுக்கு என்னென்ன பிரச்னை? ஹீரோ பிளஸ் 2 பாஸ் ஆனாரா? கடைசியில் எந்த காதலில் ஹீரோ ஜெயித்தார். இதுதான் கென் இயக்கி, நடித்த யூத் படத்தின் ஒன்லைன். தலைப்புக்கு ஏற்ப கலர் புல்லாக, யூத் புல்லாக கலகலவென கொடுத்திருக்கிறார்.

காதல் திருமணம் செய்த சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி தம்பதியினரின் ஒரே மகனான கென், ஜஸ்ட் பாஸில் பத்தாம் கிளாஸ் பாஸ் ஆவதில் இருந்து கதை தொடங்குகிறது. இந்த மார்க் எடுத்தால் எந்த ஸ்கூலில் சீட் கிடைக்கும்? நீங்க என் மகனுக்கு சீட் தராவிட்டால் விஷம் குடித்துவிடுவேன் என ஆர்ப்பாட்டம் செய்து, தனது மகனுக்கு பிளஸ் ஒன் சீட் வாங்குகிறார் பாசக்கார அம்மா தேவதர்ஷினி. ஆனால், மகனோ அதே ஸ்கூலில் படிக்கும் மீனாட்சி தினேசை முதலில் காதலிக்கிறார். அடுத்து பிரியான்ஷியை காதலிக்கிறார். அதற்கடுத்து அனிஷ்மாவை காதலிக்கிறார். அதற்குள் பிளஸ்2 எக்ஸாம் வர, அம்மா தேவதர்ஷினிக்கு ஹார்ட் அட்டாக் வர, இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் விறுவிறு திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கென். அவரே ஹீரோவாக நடித்து இருப்பது கூடுதல் பிளஸ்.

ஆரம்பம் முதல் கடைசிவரை ஒருவித துறுதுறுப்புடன், செம எனர்ஜியாக நடித்து இருக்கிறார் கென். அந்த ஸ்கூல் பையன் வேடத்துக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார். அம்மாபாசம், அப்பாவிடம் கோபம், அடுத்தடுத்து 3 பேரை காதலிப்பது, அதில் ஏற்படும் பிரச்னைகளில் சிக்குவது, பிரண்ட்ஷிப், சண்டை, காதல் பிரேக்அப் என பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். டான்சும் நன்றாக ஆடுகிறார். அவரே இயக்குனர் என்றாலும், ஓவர் பில்டப் இல்லாமல் நடித்து இருப்பது பிளஸ். ஹீரோயின்கள் மூன்று பேருமே ஸ்கூல் ஸ்டூடன்ட் ஆக வந்தாலும் போட்டி போட்டு கியூட் ஆக நடித்து இருக்கிறார்கள். மீனாட்சி தினேஷ் நடிப்பில் அழகு இருக்கிறது. பிரியான்ஷியிடம் குறும்பு, அனிஸ்மாவிடம் பாசம் இருக்கிறது. இவர்களை தவிர, ஹீரோ நண்பர்களாக வருபவர்கள், அவர்கள் அடிக்கும் லுாட்டி படத்தை இன்னும் கலகலப்பாக்கி, ரசிக்க வைக்கிறது.

கென் அப்பாவாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்வார். குடித்துவிட்டு புலம்புவது, மனைவியிடம் பாசம் காண்பிப்பது, மகனிடம் செல்ல சண்டை என படத்தில் மற்றவர்களை விட அதிக மதிப்பெண் வாங்குகிறார். மலையாளவாடை டயலாக்கை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்பாவியான அம்மாவாக தேவதர்ஷினியும் மனதில் நிற்கிறார். இப்படி நடிகர்கள் பக்காவாக செட்டானது படத்தை இன்னும் அழகாக்கி இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் முட்ட கலக்கி உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் செம வைப். கதை, கேரக்டர் உணர்ந்து அவரும் புகுந்து விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக யூத் அமையும். ஸ்கூல் போர்ஷன்களை அப்படியே இயல்பாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. ஸ்கூல் போர்ஷன் கலகலப்பாக விறுவிறுப்பாக அமைந்தது படத்தின் பெரிய பிளஸ். படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் ஸ்கூல், எக்ஸ் லவ், நண்பர்கள் நினைவுக்கு வருவது நிச்சயம். படம் முழுக்க ஒருவித காமெடி டோன் இருப்பதும், போதை, ஆபாசம், இரட்டை அர்த்தம் இல்லாமல் டீசண்ட்டாக கதையை நகர்த்தி இருப்பதும் இயக்குனர் கென் தனித்திறமை.

2014, 16 காலகட்டத்தில் கதை நகர்கிறது, அதை குறிப்பிட்டு காண்பிக்கும் காட்சிகள் மிஸ்சிங். முதல்பாதியில் கொஞ்சம் வேகமாக நகரும் கதை, இடைவேளைக்குபின் கொஞ்சம் டல்லடிக்கிறது. அடுத்து கிளைமாக்சுக்கு முன்பு வேகமெடுக்கிறது. பிளஸ் ஒன், பிளஸ் 2 படிக்கும் பையனுக்கு 3 காதல். இதெல்லாம் ஓவராக இல்லையா என சிலர் கேள்வி கேட்கலாம். ஆனாலும், கதை அப்படி. பல படங்களில் பார்த்த சீன்கள் ஆங்காங்கே இருக்கிறது. கிளைமாக்சிலும் கொஞ்சம் செயற்கை தனம். படத்தின் பெரும்பாலான சீன்களில் ஹீரோ, ஹீரோயின் ஸ்கூல் யூனிபார்மிலேயே இருப்பதும் போராடிக்கிறது. ஒரு தமிழ் ஆசிரியரை குரல் மூலமாக இழிவுபடுத்தியிருப்பது எந்தவகை மனநிலையோ? இப்படி பல மைனஸ் இருந்தாலும், படம் முழுக்க யூத் எனர்ஜி இருப்பது படத்தை பாஸ் ஆக வைத்துள்ளது

ஆட்டம், பாட்டம், காதல் என கதையை கொண்டு சென்றாலும், கடைசியில் குடும்பம் முக்கியம், படிப்பு முக்கியம் என சொல்ல விஷயம் டச்சிங். இந்த வயதில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் ஜெயித்து இருக்கிறார் கென்.

யூத் - சே, நம்ம பிளஸ் ஒன், பிளஸ் 2 லைப் இப்படி இல்லையேனு பலர் பீல் பண்ணுவது நிச்சயம்!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !