ஸ்ரீரங்கம் சென்றது ஆண்டாள் அணிந்த பட்டு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டாள் சார்த்திய பட்டு , வஸ்திரம் மற்றும் கிளி கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, தினமும் வடபத்ரசாயிக்கு சார்த்தப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமியையொட்டி மதுரையில் அழகர் வைகையாற்றில் இறங்கும் போது, ஆண்டாள் சாத்திய மாலை, பட்டு,கிளி சார்த்தப்படும். திருப்பதியில், வெங்கடாசலபதிக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது ஆண்டாள் சார்த்திய மாலை அணிவதும் வழக்கம். அதேபோல் சித்திரை ரேவதி நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் தேரோட்டத்தின் போது, ஆண்டாள் சார்த்திய பட்டு, வஸ்திரம், கிளி போன்றவற்றை அணிந்து ரங்கநாதர் காட்சியளிப்பர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் நாளை (ஏப்., 19) நடக்கும் தேரோட்டத்தில் ரெங்கநாதர் அணிவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு நேற்று மாலை பட்டு, வஸ்திரம், கிளி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் ஸ்தானிகம் ரமேஷ் மூலம் மாடவீதிகளில் சுற்றி வரப்பட்டு, ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.