உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலம்பரை கோட்டையில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!

ஆலம்பரை கோட்டையில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!

செய்யூர்: கடப்பாக்கம் அருகே நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில், இடைக்கழிநாடு என்பதற்கான, 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகாவில், கடப்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, ஆலம்பரை கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை கி.பி., 18ம் நூற்றாண்டில், முகமதியர்களால் கட்டப்பட்டது. செங்கல் கற்களாலும், சுண்ணாம்பினாலும் கட்டப்பட்டுள்ளது. கண்காணிப்பு நிலைய மாடங்களுடன், 15 ஏக்கர் பரப்பளவில், கோட்டை அமைந்துள்ளது. நவாப்களின் ஆட்சிக்காலத்தில், ஆலம்பரைக்கோட்டை துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளது. கோட்டையின் கீழ்பகுதியில், கப்பலில் வரும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான, நூறு மீட்டர் நீள படகுத்துறை உள்ளது.

கோட்டை சிதைப்பு : ஆலம்பரை படகுத் துறையிலிருந்து, சரிகை, துணி வகைகள், உப்பு, நெய், போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் அமைந்திருந்த நாணயச்சாலையில் ஆலம்பரைக்காசு, ஆலம்பரை வராகன் ஆகியவை அச்சடிக்கப்பட்டன. இக்கோட்டை கி.பி., 1735ம் ஆண்டு நவாப் தோஸ்த் அலிகான் வசம் இருந்தது. கி.பி., 1750ல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ளக்ஸ்சுக்கு, சுபேதார் முசார் பர்ஜங் இக்கோட்டையை பரிசளித்தார். கி.பி., 1760ல், பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப்படை, இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்தது. கோட்டையின் எஞ்சிய பகுதி, வரலாற்று சின்னமாக காணப்படுகிறது.

கள ஆய்வு : தமிழகத்தில் உள்ள வரலாற்று சின்னங்களை, தொல்லியல் துறை அகழ்வாராச்சி செய்து வருகிறது. ஆலம்பரை கோட்டையை தமிழக அரசின் நிதியுதவியுடன், மாநில தொல்லியல் துறை, கடந்த மார்ச் 14ம் தேதியிலிருந்து அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. தொல்லியல் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் சி.பி.சிங் அறிவுறுத்தலின்படி, தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி, அகழ்வாய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலம்பரை கோட்டையில் நான்கு இடங்களில் அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அறிவியல் முறைப்படி நான்கு மீட்டர் நீளம், நான்கு மீட்டர் அகலத்தில், குழிகள் வெட்டி அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கண்டெடுப்பு : அகழ்வாராய்ச்சியின் போது, ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகான் காலத்தில் பயன்படுத்திய, கல்லால் ஆன பீரங்கி குண்டுகள், ஈயக்குண்டுகள், பீங்கான் பாத்திரங்கள், மண் பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், காசு தயாரிக்க பயன்படுத்திய செம்பு உருக்கு கழிவுகள், இரும்புக் கழிவுகள், புகை பிடிக்கும் பைப், குழந்தைகள் விளையாடும் வட்ட சில்லுகள், வட்டச்சுற்றி, தாயத்து, கண்ணாடி பொருட்கள், விலங்குகளின் எலும்புகள், ஆகியவை கிடைத்துள்ளன.

கல்வெட்டு : அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக, கல்வெட்டு ஆய்வாளர் சிவானந்தம், தொல்லியலாளர் ரஞ்சித், உதவியாளர் மதிவாணன், திருத்தங்கள் பாலசந்தர் ஆகியோர் வேம்பனூர் முத்தாலம்மன் கோவிலில், நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு மேற்கொண்டனர். கோவில் மகா மண்டபத்தின் அடிப்பாகத்தில் இருந்த, கல்வெட்டை ஆய்வு செய்தனர். அது கி.பி., 11ம் நூற்றாண்டில் ஆண்ட, முதலாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு என்பது தெரியவந்தது. கல்வெட்டில், "இடைக்கழிநாடு எனத் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில் விளக்கு எரிக்க, 90 ஆடுகள் தானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிவன் கோவில் இருந்திருக்கலாம். பின்னர் அம்மன் கோவிலாக மாறியிருக்கலாம் என, கோவில் கட்டடக் கலையின் கட்டுமான அமைப்புகளைக் கொண்டு கண்டறிந்துள்ளனர்.

இடைக்கழிநாடு : நல்லூர் நத்தத்தனார் எழுதிய சிறுபாணாற்றுப்படையில், இடைக்கழிநாடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது பெயரை இடைக்கழிநாடு நல்லூர் நத்தத்தனார் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, இடைக்கழிநாடு பகுதியிலேயே, இடைக்கழிநாடு என்பதற்கான, கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !