உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீசர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் காலையில் வெகுவிமர்சையாக துவங்கியது. தொடர்ந்து, 25 நாட்களுக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் பலவற்றுள் மேம்பாடுற்று, இந்திரன் முதலிய தேவர்களும், அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களும், ஒன்பான் கோள்களும் முசுகுண்டன் முதலிய பெருமன்னர்களும், சோமசர்மன், ஆலயக்கருப்பன் ஆகிய அடியவர் பெருமக்களும், நீரில் மூழ்கி "இறவா இன்பம் பெற்ற பிரம்மதீர்த்தம் முதலிய புனித நீர் பொய்கையும் சூழ்ந்து, "விளங்கா நின்ற வில்வாரணீயம் என, பெயர் பெற்ற திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் ஸ்வாமி, பெரியநாயகி அம்மனுடன் மேற்கு நோக்கி அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்திருத்தலத்தின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பின் நந்தி பெருமானுடைய கொடியேற்றப்பட்டு நேற்றுக்காலையில் ஒன்பது மணியளவில் துவங்கியது. இதில், வரும் 23ம் தேதி தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் நடக்கும் மண்டகப்படிகள், புஷ்ப விமானத்தில் ஸ்வாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வரும் 26ம் தேதி பக்தர்கள் வகையறா சார்பில் இந்திர விமானமும், 29ம் தேதி காலையில் வெண்ணெய் தாழியும், இரவில் வெள்ளி ரிஷப வாகன ஊர்வலமும் நடக்கிறது. 30ம் தேதி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கைலாச வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா, இரவு 10.15 மணிக்குமேல் தியாகராஜர் ஸ்வாமிகள் தேரோட்டத்தில் எழுந்தருள்கிறார். மே ஒன்றாம்தேதி காலை ஆறு மணி முதல் 6.40 மணிக்குள் திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. ஆறாம்தேதி இரவு குதிரை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடும், எட்டாம்தேதி புஷ்ப வியாபாரிகள், தொழிலாளர்கள் சார்பில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நீதிமணி, தக்கார் சிவராம்குமார், கணக்கர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். இதையொட்டி சிவாச்சாரியார் சோமாஸ்கந்தனுக்கு கங்கணம் கட்டப்பட்டு சிறப்பு பூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !