திருவிசநல்லுாரில் கங்காவதரண மகோத்சவ நீராடல்
தஞ்சாவூர், திருவிசநல்லுார் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று கங்காவதரண மகோத்சவ நீராடல் நிகழ்ச்சியில், ஏராளமானோர் புனித நீராடினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிசநல்லூரில் கிராமத்தில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நுாற்றாண்டுகளுக்கு முன் பக்தி நெறி தவறாமல் வாழ்ந்து வந்தார். தன் தந்தைக்கு ததி கொடுக்க கார்த்திக்கை அமாவாசையான நாளில், ஏற்பாடுகளை செய்து, புரோகிதர்கள் சிலரை வரவழைத்தார். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்தார். புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும் என்பது ஐதீகம். அந்த நேரத்தில், ஐயாவாள் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டு, சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து, பசியால் மயங்கி கிடந்தவருக்கு அளித்தார்.இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள், இதற்கு பரிகாரமாக கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் இந்த பாவம் நீக்கும் என ஐயாவாளை சபித்தனர். ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என சிவனிடம் வேண்டினார். அப்போது ஐயாவாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும் நீராடி மடத்துக்கு ஈரத்துணியோடு வந்து மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.நீலவேம்பு: மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக, புனித நீராட வந்த பக்தர்கள் 5,250 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.