உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மூக்குபொடி சித்தர் குருபூஜை விழா

திருவண்ணாமலையில் மூக்குபொடி சித்தர் குருபூஜை விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த, மூக்குபொடி சித்தர் முதலாமாண்டு குருபூஜை விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் மூக்குபொடி சித்தர்; இவர், அருணாசலேஸ்வரர் ஈர்ப்பால், 1984ல், திருவண்ணாமலை வந்தார். கோவில் புரவி மண்டபம், சிவகங்கை தீர்த்தக்குளம் பகுதியில் தங்கி, நீண்ட நாட்களாக மூக்குபொடி போட்டவாறு தியானத்தில் ஈடுபட்டார். பக்தர்கள் அவரை சித்தராக வழிபட தொடங்கினர். அவரிடம் ஆசி வாங்க வரும் பக்தர்கள், மூக்குபொடியை காணிக்கையாக செலுத்தினர். கிரிவலப்பாதையில், திருநேர் அண்ணாமலை, ஆகாஷ் ஓட்டல், தேரடி வீதி பூபதி டீ கடை, பகுதிகளில் அவர் விரும்பிய நாட்கள் வரை, அங்கேயே தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இறுதியாக, சஷோத்திரி ஆஸ்ரமத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு அங்கு, சித்தி அடைந்தார். அவரை வாயுலிங்கம் அருகே அடக்கம் செய்தனர். அன்று முதல், அவரது சமாதிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று, அவரது சாமாதியில், சாதுக்களுக்கு வஸ்திர தானம், பணம், அறுசுவை உணவு வழங்கி, முதலாமாண்டு குருபூஜை நடந்தது. மூக்குபொடி சித்தர் ஆஸ்ரம ஆலோசகர் முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி துரை செய்திருந்தார். குருபூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !