உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் பால்குடப்பெருவிழா

மாரியம்மன் கோவில் பால்குடப்பெருவிழா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் ஆதிதேவி மகாமாரியம்மன்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று பால்குடப்பெருவிழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருநாகேஸ்வரம், சீனிவாசநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து பிரார்த்தனை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு. இவ்வாண்டும் வருகிற மே மாதம் 5ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யானை மீது பால்குடமும், அலகு காவடிகளும், அக்னி கொப்பரையும், பிள்ளை தொட்டில் கட்டி தூக்குதலும், பாடைக்கட்டி தூக்குதலும் வானவேடிக்கைகளுடன் வீதியுலா வரும். திருநாகேஸ்வரம் மேலவீதி, வடக்குவீதி, கடைவீதி, காரைக்கால் சாலை, தெற்குவீதி என சென்று திரும்பும். தொடர்ந்து பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் மதியம் 3.00 மணிக்கு ஆதிதேவி மகாமாரியம்மனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு போட்டும் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்வர். இரவு 8 மணிக்கு அம்பாள் வீதியுலாக்காட்சி நடைபெறுகிறது. விழாவின் முதல்நாள் 4ம் தேதி காலை 10 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சம்பந்தம், நடராஜன், சேதுராமன், கலையரசு, கணபதி மற்றும் திருநாகேஸ்வரம், சீனிவாசநல்லூர் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !