உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து

மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து

மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்தார்.  முப்பது வயது பக்தர் ஒருவர் சுவாமிகளைத் தேடி வந்தார். கலங்கிய கண்களுடன் பேசத் தொடங்கினார். ”சுவாமி! நான் கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து  உங்களைத் தரிசிப்பதற்காக வந்திருக்கிறேன். என் வீட்டை ஜப்தி செய்யப்  போகிறார்கள். அது என் முன்னோர் கொடுத்த பரம்பரைச் சொத்து. சில ஆண்டுக்கு முன் என் அத்தையின் கணவர் காலமானார்.  அப்போது அத்தையின் இரண்டு  மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் என் தந்தை   வீட்டை அடமானம் வைத்து பத்தாயிரம் ரூபாய் வாங்கினார். அதில்  திருமணத்தை நடத்தினார். பிறகு என் தந்தையால், வீட்டை மீட்கவே  முடியவில்லை.   இப்போது அப்பா, அத்தை இருவரும் காலமாகி விட்டனர். கடன்  தொகை வட்டியோடு சேர்த்து ஐம்பதாயிரம் ஆகிவிட்டது. என்னால் பணம்  கொடுக்க முடியாததால் வீடு ஜப்திக்கு வந்து விட்டது. தங்களை தரிசித்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன்” என்றார்.  மகாசுவாமிகள் கனிவோடு விசாரித்தார்:”உன் பேர் என்ன? யாருடைய பிள்ளை நீ?” ”என் பேர் ஹரிஹர சுப்பிரமணியன். என் அப்பா பேர் ஹரிஹர நாராயணன்” ”அடடே.... ஆயுர்வேத மருத்துவர்கள் பரம்பரை அல்லவா உன்னுடையது. நீ என்ன  செய்கிறாய்?” ”எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை சுவாமி. கல்யாணமாகி குழந்தை  இருக்கிறது. ரைஸ்மில்லில் குமாஸ்தாவாக இருக்கிறேன். சொற்ப வருமானம்  தான். வீட்டை மீட்க வழி தெரியவில்லை. நவராத்திரி சமயத்தில் வீட்டை அடகு  வைத்ததாலோ என்னவோ, மகாலட்சுமி வீட்டை விட்டுப் போய்விட்டாள். கொலு  வைப்பதையே நிறுத்தி விட்டேன்.””லட்சுமி  உன்னை விட்டுப் போய்விட்டதாகச் சொல்லாதே. ஆதிசங்கரரின்  கனகதாரா ஸ்தோத்திரம் படி. நவராத்திரியின் போது கொலு வைத்து தேவியை  வழிபடு. வழி பிறக்கும்!” நம்பிக்கையுடன் பாலக்காடு திரும்பினார் இளைஞர். அந்த ஆண்டு கொலு அடுக்க பரணில் இருந்து பொம்மைப் பெட்டியை இறக்கியபோது, மூதாதையர் பாதுகாத்த அபூர்வ ஆயுர்வேதச் சுவடிகள் இருப்பதைக் கண்டார். மறுபடி சதாரா சென்று  மகாசுவாமிகளிடம் சுவடிகளைச் சமர்ப்பித்தார்.  அப்போது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தச் சுவடிகளைத் தேடிக் கொண்டிருந்த  ஆராய்ச்சியாளர் ஒருவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். சுவடிகளைப்  பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அவற்றை   பெற்றுக் கொண்டார்.  பாலக்காட்டு இளைஞரிடம், ”இந்தப் பணத்தைக் கொடுத்து பரம்பரை வீட்டை  மீட்கும் வழியைப் பார்.  உன் பிரச்னை தீர்ந்ததா?” எனக் கேட்டபோது, பக்தரின்  விழிகளில் கண்ணீர் வழிந்தது. பக்தனின் வீட்டோடு மகாலட்சுமி தங்கி விட்டாள்  என்பது தானே நிஜம்!- திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !