சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவஸ்தலமான சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கசுவாமி கோயில்களில் சித்திரை அமாவாசை விமரிசையாக நடந்தது. நண்பகல் உச்சிகால பூஜைகளுடன் அமாவாசை பூஜைகள் துவங்கின. மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனைகள், நாகாபரண அலங்காரம் நடந்தது. சங்கொலி பூஜைக்கு பின் தீபாராதனை அன்னப்படையல் வழிபாடும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயிலில், சித்திரை அமாவாசையை முன்னிட்டு, அன்னப்படையல் வழிபாடு நடந்தது. காலையில் அங்குள்ள சுந்தரமகாலிங்கசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அய்யனார், மாமுண்டி கருப்பசாமி, பெரியகருப்பசாமிக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜையை தொடர்ந்து , சுந்தரமகாலிங்கசுவாமி சன்னதியில் அன்னப்படையல் வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சரவணன், கோயில் பொறுப்பாளர் சரவணன், பூஜைதாரர் மணிகண்டன் செய்திருந்தனர்.