உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் இறங்கும் அழகருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு: கலெக்டர் அறிவிப்பு

ஆற்றில் இறங்கும் அழகருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு: கலெக்டர் அறிவிப்பு

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக, அணையில் தண்ணீர் திறக்கப்படும், என கலெக்டர் சகாயம் தெரிவித்து உள்ளார். சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சகாயம் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பேசியதாவது: திருக்கல்யாண விருந்து தரமானதாக இருக்க வேண்டும். விருந்துக்கு முன் உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும். தேரோட்டம் நடக்கும் நான்கு மாசி வீதிகளிலும், கோயில் நிர்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். தேரோட்டம் தங்கு தடையின்றி நடக்க, சாலைகளை புதுப்பிக்க வேண்டும். தேர்களின் ஸ்திரத்தன்மையை குறித்து ஆய்வு செய்து, உறுதிச்சான்று பெற வேண்டும். மே 6ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு, வைகை அணையில் தண்ணீர் திறந்து விடுவதை பரிசீலிக்க, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அனைத்து தரப்பிலும், முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.போலீஸ் எஸ்.பி., ஆஸ்ராகர்க், துணை கமிஷனர் திருநாவுக்கரசு, ஆர்.டி.ஓ., துரைராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர், மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், அழகர்கோவில் துணை கமிஷனர் செல்வராஜ், செயற்பொறியாளர் தனபால் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !