அழகர்கோவில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா!
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழா, நேற்று மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, இந்தாண்டு விழா மே 2ல் துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களும் பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள், கோயிலை வலம் வருகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக மே 4 மாலை 5 மணிக்கு கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். மே 6ல் தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 6 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின், அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் செல்கிறார். அழகர்கோவிலில் இருந்து வழிநெடுகிலும் பக்தர்கள் அமைத்திருக்கும் 397 திருக்கண் மண்டகப்படிகளில், அழகர் எழுந்தருளுகிறார். மண்டகப்படிகள் அமைப்பதற்கான முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழா, நேற்று காலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்தது. ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொட்டகை அமைக்க, முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. மாலை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் முகூர்த்த விழா நடந்தது.