ஆக்கிரமிப்பின் பிடியில் கோயில் தெப்பம் மீட்டு சீரமைக்க நடவடிக்கை தேவை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திற்கான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தெப்பத்தை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையானது. மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், பிரம்மா, துர்க்கை, நடராஜர், நவக்கிரக தெய்வ வழிபாடுகளுக்கு தனித்தனி இடங்கள் உள்ளன.
இக்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள தெப்பம் சிதிலமடைந்துள்ளது. அதைச்சுற்றி உள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தெப்பத்தில் செடிகள் வளர்ந்து குப்பை குவிந்து கிடக்கிறது. அதனை சீரமைத்து தண்ணீர் தேக்க பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
தெப்பத்திற்கான சுவடு தெரியாமல் இருந்த இடத்தை கடந்த சில ஆண்டுக்கு முன் கண்டு பிடித்து தெப்பத்தை அடையாளம் காட்டினர். இருப்பினும் தெப்பத்திற்கான இடம் முழுமை யாக மீட்கப்படவில்லை. தெப்பத்தை சீரமைக்கவோ அல்லது புதிதாக அந்த இடத்தில் தெப்பம் அமைக்கவோ இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதில் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.