உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை 10

கிறிஸ்துமஸ் சிந்தனை 10

நற்செய்தியின் மகிழ்ச்சி

இன்றைய உலகில் எல்லா மனிதர்களுமே தேடி அலையும் ஒன்று மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி என்பது நம்மையும், நம்மிடம் இருப்பதையும், பகிர்வதில் தான் நிறைவு பெறுகிறது என்பதை நினைவு கூர்வதே கிறிஸ்து பிறப்பு. பணம், பட்டம், பதவி, புகழைச் சேர்ப்பதில் தான் மகிழ்ச்சி என எண்ணியிருந்த உலகிற்கு இவற்றை மாயை என உணர்த்தி, இழப்பதும், பகிர்வதுமே மகிழ்ச்சி என எடுத்துச் சொன்ன நாள் தான் பாலன் இயேசு மழலையான மகத்துவ நாள். உலக செல்வங்களில் ஊறிப் போனதாலோ என்னவோ, இன்றைக்கு கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சி என்பதை மாயையில் சிக்குண்ட நமக்கு நுகரும் பொருட்களை வைத்து கருத வேண்டியிருக்கிறது. அன்பையும், அன்பை பகிர்தலிலும், மகிழ்ச்சியோடும் வழங்கிய மன்னவன் இயேசுவின் பிறப்பு நமக்கு வைக்கும் சவால். மானுட சமத்துவதிலே மகிழ்ச்சி காண இயேசுவின் மானுட பிறப்பு அழைப்பு விடுக்கிறது. எனவே தான் ‘நற்செய்தியில் மகிழ்ச்சி ’ என்னும் தனது திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் நற்செய்தி என்பது தன்னுடைய மக்கள் ஒருவரும் தொலைந்து விடக்கூடாது என்ற விருப்பத்தில், மகிழ்ச்சியை தொலைத்த ஆட்டுக்குட்டியை தேடிச் சென்று, மந்தைக்கு திரும்பக் கொண்டு வரும் நல்ல ஆயனின் மகிழ்ச்சி’ எனக் குறிப்பிடுகிறார்.

பாலன் இயேசு காட்டும் மகிழ்ச்சியை பெற நம்மிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுப்போம். அப்போது மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி நமதாகும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !