ஜன.1ல் மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஜன., 1 ல் துவங்குகிறது.
ஜன., 9 வரை நடக்கும் விழாவில் தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளி தைலக்காப்பு முடிந்து சித்திரை வீதிகள் வழியாக கோயில் அடைவார். ஜன.,10 திருவாதிரையன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனம், அம்மன் மர சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வருவர். திருவெண்பா உற்ஸவம் ஜன.,1 முதல் 10 வரை நடக்கும். நுாறு கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன் சவுக்கையில் மாணிக்கவாசகர் எழுந்தருளி, திருவெண்பா பாடி தீபாராதனை நடக்கும்.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு ஜன.,9 இரவு முதல் ஜன.,10 காலை வரை அபிஷேகம் நடக்கும். காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்ஸவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா சேத்தியாகும்.அபிஷேக பொருட்களை ஜன.,9 இரவு 7:00 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.