பகல்பத்து உற்சவம்: வாமன அவதார காட்சியளித்த நம்பெருமாள்
உடுமலை: உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவத்தின், ஐந்தாம் நாளில், வாமன அவதாரத்தில், அருள்பாலித்த எம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
உடுமலை, பெரியகடை வீதி, பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிச., 27ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. நேற்று, பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளையொட்டி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் பாசுரங்கள் சேவை நடந்தது. எம்பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.ஐந்தாம் நாளான நேற்று வாமன அவதாரத்தில், எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி பாசுரங்கள் சேவைக்கு பிறகு, பரசுராம அவதாரத்தில், பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். மேலும், மார்கழி உற்சவத்தையொட்டி, அதிகாலை 5:30 மணி முதல் 6.25 மணி வரை, பாகவத கோஷ்டியினரால், திருப்பாவை பாசுரங்கள், பஜனையாக பாராயணம் செய்யப்படுகிறது. பெரியகடை வீதி, பிரசன்ன விநாயகர் கோவில் வீதி, வழியாக திருவீதியுலா நடக்கிறது. ஆர்வமுள்ள ஆன்மிக அன்பர்கள், பஜனை கோஷ்டியில் இணையலாம் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.