மண்பானையில் பொங்கல் வையுங்கள்! பண்டிகையோடு பல பேர் வாழ்க்கை சிறக்கும்
உழவர்களின் திருநாள்; உழைப்பாளர்களின் திருநாள்; தமிழர்களின் திருநாள்; சுயமரியாதைக் காரர்களும் கொண்டாடும் பெருநாள் என, தைத்திருநாளுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தபோது, சென்னை உள்ளிட்ட பெருநகர மக்கள், அறவழியில் திரண்டு தடையை உடைத்தது, உலக வரலாறு.
நாட்டு மாடுகளைக் காப்போம்; பெருவணிக நிறுவனங்களால் நலிவுறும் கிராமியத் தொழில்களை மீட்போம்; இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம்; எதற்காகவும் பண்பாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் என, இளைஞர்கள் முரசறைந்து ஆர்ப்பரித்தனர். அத்துடன், உடனே பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என, அரசுக்கு அறைகூவல் விடுத்தனர். ஆனாலும், பீட்சா, பர்கருக்கும், பாட்டில் பானங்களுக்கும் இளைஞர்கள் கொடுக்கும் ஆதரவு, இளநீர், பழங்களுக்கு கொடுப்பதில்லை. அதேபோல் தான், பாரம்பரியத்தை சொல்லும் பொங்கல் திருநாளில் கூட, குக்கரில் பொங்கலிடும் பழக்கத்தில் இருந்து, பெரும்பாலான பெண்கள் இன்னும் விடுபடவில்லை. சிறுபானைகள் பொங்கல் சமயத்திலும், பெரும்பானைகள் கோடைக்காலத்திலும், அகல் விளக்கு, சாம்பிராணி மடக்கு உள்ளிட்டவை கார்த்திகை மாதத்திலும் விற்கப்படும்.
அதீத நம்பிக்கை: இதற்காக, மண்பாண்ட தொழிலாளர்கள்,20லிருந்து,30 சக்கரங்களைச் சுற்றி மண்பாண்டங்களை செய்வர்.இப்போதெல்லாம்,ஒன்றிரண்டு சக்கரங்கள் சுற்றுவதே பெரும்பாடாக உள்ளது. காரணம், வினையப்பட்ட மண்பாண்டங்களே, கேட்பாரற்று கிடக்கின்றன. ஆனாலும், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள குயவர்கள், அதீத நம்பிக்கையில் தான், அவற்றை தயாரிக்கின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும், நம் வாழ்க்கைச் சக்கரம் எவ்வித சிக்கலும் இல்லாம் சுழலும் என்னும் நம்பிக்கையோடு தான், பானைச் சக்கரத்தை சுழற்றுகின்றனர்.திருவேற்காடு அருகில் உள்ள, வடநுாம்பலைச் சேர்ந்தோர், மும்முரமாக பானை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், சென்னை, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பகுதிகளில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில், வண்ண பூ ஓவியங்களையும், தோரணங்களையும் வரைந்து பானைகளை மெருகேற்றிக் கொண்டிருந்தனர்.பொங்கல் விழா சிறக்கும் என்ற நம்பிக்கையில்.
நாங்கள் பல தலைமுறைகளாக, பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்களைத் தான் செய்து, வாழ்க்கையை ஓட்டி வந்தோம். எங்களுக்குப் பின், இந்த தொழிலில் ஈடுபட ஆளிருக்காது. காரணம், மண் பாண்டம் செய்யும் களிமண்ணுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இரண்டு, மூன்று பேர் சேர்ந்து, அதிக விலைகொடுத்து, வேன் பிடித்து தான் மண் வாங்கி தொழில் செய்கிறோம்.
ஆனந்தம் அதிகம்: அதிலும், மழை பெய்தால், பச்சை மண்ணும், பாண்டங்களும் கரைந்துவிடும். உழைப்பும், வீணாகிவிடும்.தற்போது பொங்கல் சமயம் என்பதால்,பானைகளை செய்கிறோம். பொங்கலுக்கு, மண்பானையில் பொங்கல் வைத்தால் தான், இயற்கையாக இருக்கும் எனவும், மண்ணுக்கும், இறைவனுக்கும் தொடர்பு உள்ளதால்,மண்பானை பொங்கல் தான் தெய்வீகமானது எனவும் முன்னோர் சொல்வர். பானை பொங்கும் போது, பொங்கலோ... பொங்கல் என, ஆரவாரம் செய்வதில் தான் ஆனந்தம் அதிகம். தற்கால தலைமுறைக்கு, அதையெல்லாம் சொல்வதற்கு ஆளில்லை. என்றாலும், காலம் மாறும் என்ற நம்பிக்கையில் தான், பானைகளை செய்கிறோம், என்கிறார், வடநுாம்பலைச் சேர்ந்த தொழிலாளி வேதாச்சலம். பொங்கல் பானைகளை, மொத்த வியாபாரிகளுக்கு, 100 ரூபாய்க்குள் விலை வைத்துக் கொடுக்கிறோம். அவர்கள், அத்துடன், 50 ரூபாய் வரை லாபம் வைத்து விற்பர். உடைந்தோ, ஓட்டை விழுந்தோ நஷ்டம் ஏற்பட்டு விடும் என்பதால், இந்த தொழிலில் கடைசி வரை கவனமாக இருக்க வேண்டும். ஜெ., முதல்வராக இருந்த போது, எங்கள் தொழிலாளர்களுக்கு, வேலை இல்லாத காலத்தில், 5,000 ரூபாய் வழங்கினார். இப்போது, அது சரியாக கிடைப்பதில்லை. இளந்தலைமுறையினர், மண்பானையில் பொங்கல் வைத்தால், அவர்கள் வீட்டில் மட்டுமல்ல, எங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கும், என்கிறார் மற்றொரு தொழிலாளி -சாமிநாதன்.